
ஆலயத்திருவுலா....
திருவடி சூலம்
இனிய உறவுகளே!
செங்கல்பட்டிலிருந்து திருக்கழுக்குன்றம் செல்லும் சாலையில் 3 கி மீ தூரத்தில் போருர் செல்ல ஒரு பாதை பிரியும். அந்த பாதையில் 3 கிமீ தூரம் சென்றால் கொப்புக் காடுகளுக்கிடையே ஒரு அலங்கார வளைவு தெரியும். அந்த வளைவினுள் சென்றால் அழகிய கிராமமும், சுமார் 1100 ஆண்டுகளுக்கு முந்திய தொண்டை மண்டல பாடல் பெற்ற தலமுமான திருவடி வலம் எனும் திருவடி சூலம் ஆலயம் நம்மை வரவேற்கும்.
மலைகள் சூழ்ந்த இயற்கை எழில் கொஞ்சும் ரம்மியமான இடத்தில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.
இறைவன் பெயர் : இடைச்சுர நாதர், ஞானபுரீஸ்வரர்
இறைவி பெயர் : கோவர்த்தனாம்பிகை ( மலைமகள்) இமயமடக்கொடி.
பெயர்க் காரணம் :
1. இறைவன் இடையர் வடிவில் சம்மந்தருக்கு காட்சியளித்ததால் இடைச்சுர நாதர் என்று அழைக்கப் படுகிறார்.
2. இறைவன் திருக் கச்சூரிலிருந்து திருக்கழுக்குன்றம் செல்லும் பொழுது தனது இடது பாதத்தையும், சூலத்தையும் வைத்த இடமாதலால் இடைச்சுர நாதர் என்றும், இந்த தலம் திருவடி சூலம் என்றும் வழங்கப்படுகிறது.
3. அம்மன் இறைவருக்கு பசு வடிவில் பால் கொடுத்த்தால் கோவர்த்தனாம்பிகை ( மலைமகள்) என்றும், இமயமடக்கொடி என்றும் அழைக்கப்படுகிறாள்.
சிறப்புகள் :
சுயம்பு மரகத லிங்கத்திருமேனி. தேனாபிஷேகம் செய்து ஆரத்தி காண்பிக்கும் போது இறைவனின் ஜோதி சொரூப தரிசனத்தைக் காண கண்கள் கோடி போதாது.
மிகவும் பழமை வாய்ந்த அமைதியான கற்கோயில். மகா வில்வம் உள்ள மிகச் சில ஆலயங்களில் இதுவும் ஒன்று. கௌதம மகரிஷியும், சனற்குமாரரும் வழிபட்ட தலம். இத்தலத்தில் சிவராத்திரி மிகவும் விசேஷம். அந்நாளில் நான்கு சாம வழிபாடுகளும் முறையாக நடைபெறுகின்றன. திரளானோர் வந்து தரிசிக்கின்றனர் : இதுதவிர பிரதோஷ பூஜைகள் சிறப்பாக நடைபெறுகின்றது.
பிரகாரத்தில் வில்வம், வேம்பு, ஆலமரம் ஆகிய மூன்று மரங்கள் இணைந்திருக்கிறது. சிவன், அம்பாள், விநாயகர் ஆகிய மூவரும் இம்மரத்தில் வடிவில் அருளுகின்றனர் என்பதால் இங்கு வேண்டிக்கொண்டால் பிரிந்திருக்கும் குடும்பங்கள் இணையும், ஒற்றுமை கூடும் என நம்புகின்றனர். சிவன் மறைந்த குளம் ""காட்சிக்குளம்'' என்ற பெயரில் தற்போதும் இருக்கிறது.
அமைப்பு :
இராஜ கோபுரமில்லை. முகப்பு வாயிலுக்கு முன்னால் இடப்பால் வரசித்தி விநாயகர் சந்நிதி உள்ளது. முகப்பு வாயில் தெற்கு நோக்கியது. வாயிலில் நுழைந்து விநாயகரைத் தொழுது, வலமாகப் பிராகாரம் சுற்றி வந்தால் பிரம்மாண்டேஸ்வரர் சந்நிதியும் அதையடுத்து பிரம்மாண்டேஸ்வரி சந்நிதியும் தனித்தனியே உள்ளன. கொடிமரம் இல்லை. பலிபீடம், நந்தி மட்டுமே உள்ளன. பக்கத்தில் வில்வமரம் ( மகா வில்வம் ) உள்ளது. உள்வாயிலில் நுழைந்து, மண்டபம் தாண்டி, வலமாகச் சுற்றி வந்தால் நால்வர் பிரதிஷ்டை உள்ளது. விநாயகர், சந்நிதியும், வள்ளி தெய்வயானை உடனாகிய சுப்பிரமணியர் சந்நிதியும் அடுத்து உள்ளன. அடுத்த தரிசனம் பைரவர். கருவறை அகழி அமைப்புடையது. நல்ல கற்றளி. மூலவர் சந்நிதிக்கு இருபுறமும் விநாயகரும் முருகப் பெருமானும் காட்சியளிக்கின்றனர். உள்ளே நுழைந்ததும் கருவறையுள் நேரே அம்பாள் (தெற்கு நோக்கி) காட்சி தருகின்றாள். நின்ற திருக்கோலம். சுவாமி கிழக்கு நோக்கிய தரிசனம். சதுரபீட ஆவூடையார்.
தலப் பெருமை
பல்லாண்டுகளுக்கு முன்பு வில்வ வனமாக இருந்த இப்பகுதிக்கு மேய்ச்சலுக்கு வந்த பசு ஒன்று மட்டும் சரிவர பால் தரவில்லை. சந்தேகப்பட்ட இடையன், அப்பசுவை கண்காணித்தபோது ஒரு புதருக்குள் சென்று பால் சொரிவதை கண்டான். இவ்விஷயத்தை அவன் ஊர் மக்களிடம் சொல்ல, அவர்கள் புதரை விலக்கி பார்த்தபோது சிவன் சுயம்பு மரகதலிங்கமாக இருந்ததைக் கண்டனர். பின் இவ்விடத்தில் கோயில் கட்டி வழிபட்டனர். அம்பிகையே பசு வடிவில், ஞானம் தரும் பாலை அபிஷேகித்து பூஜை செய்த சிவன் என்பதால் இவரை "ஞானபுரீஸ்வரர்' என்றும், அம்பாளை "கோவர்த்தனாம்பிகை' (கோ - பசு) என்றும் அழைக்கின்றனர். இவரிடம் வேண்டிக்கொண்டால் கல்வி ஞானம் பெறலாம் என்பது நம்பிக்கை.
அம்பாள் அமைப்பு: பொதுவாக அம்பாள் தன் பாதங்களை நேராக, ஒன்றோடு ஒன்று நேராக வைத்துத்தான் காட்சி தருவாள். ஆனால் இத்தலத்து அம்பாளோ தன் இடது காலை சற்று முன் வைத்து, வலது காலை பின்னே வைத்தபடி (நடந்து செல்வதற்கு தயாராகும் நிலையில்) காட்சி தருகிறாள். இந்த அமைப்பு வித்தியாசமானதாகும்.
சிவன், இடையன் வடிவில் திருஞானசம்பந்தரின் களைப்பை போக்க கிளம்பியபோது அம்பாளும் அவருடன் கிளம்பினாள். அவரோ, அம்பாளை தன்னுடன் அழைத்துச் செல்ல மறுத்தார். அம்பாள் சினத்துடன் காரணம் கேட்டாள்.
""திருஞானசம்பந்தன் நீ கொடுத்த ஞானப்பாலை குடித்தவன். தாயை தெரியாத குழந்தை உலகில் இருக்க முடியாது. எந்த குழந்தையும் தன் தாயை எளிதில் அடையாளம் கண்டுவிடும். நீ வந்தால் சம்பந்தன் எளிதில் நம்மை தெரிந்து கொண்டு விடுவான். அதனால் நீ இங்கேயே இரு!'' என சொல்லிவிட்டு சென்றுவிட்டார். இதனால்தான், அம்பாள் தன் காலை முன்வைத்து கிளம்பிய கோலத்திலேயே இருக்கிறாள் என்கின்றனர். காலில் ஊனம் உள்ளவர்கள் இவளிடம் வேண்டிக்கொண்டால் மனதில் அமைதி உண்டாகும்.
இத்தலத்து தெட்சிணாமூர்த்தியின் காலுக்கு கீழே இருக்கும் முயலகன் இடது பக்கம் திரும்பி படுத்த கோலத்தில் வித்தியாசமாக இருக்கிறான். தெட்சிணாமூர்த்தியை அவரது சீடர் சனத்குமாரர் வழிபட்டுள்ளார்
தல புராணம்
நால்வரில் ஒருவரான திருஞானசம்பந்தர் சிவதல யாத்திரையின் போது இவ்வழியாக சென்று கொண்டிருந்தார். நீண்ட தூரம் நடந்து வந்ததால் பசி வயிற்றைக் கிள்ளியது. சூரியன் உச்சிவானில் ஏற, ஏற வெயிலும் கூடியது. களைப்படைந்த சம்பந்தர் ஓய்வெடுக்க ஒரு மரத்தின் அடியில் அமர்ந்தார். அப்போது அங்கு கையில் சிறிய தடியுடன், கோவணம் கட்டியபடி மாடு மேய்க்கும் இடையன் ஒருவன் வந்தான். கையில் தயிர் களையம் வைத்திருந்த அவன், சம்பந்தர் பசியோடு இருந்ததை அறிந்து தயிரை பருக கொடுத்தான். களைப்பு நீங்கிய சம்பந்தரிடம் நீங்கள் யார்? என்று இடையன் கேட்க, அவர் தனது சிவதல யாத்திரையைப் பற்றி கூறினார். அவரிடம், இதே வனத்திலும் ஒரு சிவன் இருப்பதாக கூறிய இடையன், அங்கு வந்து பாடல் பாடி தரிசனம் செய்யும்படி கட்டாயப் படுத்தினான். இடையன் மூலமாக பசியாறிய சம்பந்தரால் அவனது சொல்லை தட்டமுடியவில்லை.
இடையனாக இருந்தாலும் அழகு மிகுந்தவனாக இருந்ததைக் கண்ட சம்பந்தர் மனதில் சந்தேகம் கொண்டாலும், "எல்லாம் சிவன் சித்தம்' என்றெண்ணிக் கொண்டு அவனை பின்தொடர்ந்தார். வழியில் ஒரு குளக்கரையில் நின்ற இடையன், சம்பந்தரை பார்த்து புன்னகைத்து விட்டு மறைந்து விட்டான். திகைத்த சம்பந்தர் சிவனை வேண்டினார். அவருக்கு காட்சி தந்த சிவன், இடையன் வடிவில் அருள்புரிந்ததை உணர்த்தினார். இடையனாக வந்து இடையிலேயே விட்டுவிட்டு சென்றதால் சிவனை, ""இடைச்சுரநாதா!'' என்று வணங்கி பதிகம் பாடினார் சம்பந்தர். சிவன் மரகத மேனியுடன் சுயம்புமூர்த்தியாக எழுந்தருளினார். "இடைச்சுரநாதர்' என்ற பெயரும் பெற்றார்
இதோ திருஇடைச்சுரம் பதிகம்
திரு இடைச்சுரம்
பண் - குறிஞ்சி
வரிவள ரவிரொளி யரவரை தாழ
வார்சடை முடிமிசை வளர்மதி சூடிக்
கரிவளர் தருகழல் கால்வல னேந்திக்
கனலெரி யாடுவர் காடரங் காக
விரிவளர் தருபொழில் இனமயி லால
வெண்ணிறத் தருவிகள் திண்ணென வீழும்
எரிவள ரினமணி புனமணி சாரல்
இடைச்சுர மேவிய இவர்வண மென்னே.
ஆற்றையு மேற்றதோர் அவிர்சடை யுடையர்
அழகினை யருளுவர் குழகல தறியார்
கூற்றுயிர் செகுப்பதோர் கொடுமையை யுடையர்
நடுவிரு ளாடுவர் கொன்றையந் தாரார்
சேற்றயல் மிளிர்வன கயலிள வாளை
செருச்செய வோர்ப்பன செம்முக மந்தி
ஏற்றையொ டுழிதரும் எழில்திகழ் சாரல்
இடைச்சுர மேவிய இவர்வண மென்னே.
கானமுஞ் சுடலையுங் கற்படு நிலனுங்
காதலர் தீதிலர் கனல்மழு வாளர்
வானமும் நிலமையும் இருமையு மானார்
வணங்கவும் இணங்கவும் வாழ்த்தவும் படுவார்
நானமும் புகையொளி விரையொடு கமழ
நளிர்பொழி லிளமஞ்ஞை மன்னிய பாங்கர்
ஏனமும் பிணையலும் எழில்திகழ் சாரல்
இடைச்சுர மேவிய இவர்வண மென்னே.
கடமணி மார்பினர் கடல்தனி லுறைவார்
காதலர் தீதிலர் கனல்மழு வாளர்
விடமணி மிடறினர் மிளிர்வதோ ரரவர்
வேறுமோர் சரிதையர் வேடமும் உடையர்
வடமுலை யயலன கருங்குருந் தேறி
வாழையின் தீங்கனி வார்ந்து தேனட்டும்
இடமுலை யரிவையர் எழில்திகழ் சாரல்
இடைச்சுர மேவிய இவர்வண மென்னே.
கார்கொண்ட கடிகமழ் விரிமலர்க் கொன்றைக்
கண்ணியர் வளர்மதி கதிர்விடக் கங்கை
நீர்கொண்ட சடையினர் விடையுயர் கொடியர்
நிழல்திகழ் மழுவினர் அழல்திகழ் நிறத்தர்
சீர்கொண்ட மென்சிறை வண்டுபண் செய்யுஞ்
செழும்புன லனையன செங்குலை வாழை
ஏர்கொண்ட பலவினொ டெழில்திகழ் சாரல்
இடைச்சுர மேவிய இவர்வண மென்னே.
தோடணி குழையினர் சுண்ணவெண் ணீற்றர்
சுடலையி னாடுவர் தோலுடை யாகப்
பீடுயர் செய்ததோர் பெருமையை யுடையர்
பேயுட னாடுவர் பெரியவர் பெருமான்
கோடல்கள் ஒழுகுவ முழுகுவ தும்பி
குரவமும் மரவமும் மன்னிய பாங்கர்
ஏடவிழ் புதுமலர் கடிகமழ் சாரல்
இடைச்சுர மேவிய இவர்வண மென்னே.
கழல்மல்கு காலினர் வேலினர் நூலர்
கவர்தலை யரவொடு கண்டியும் பூண்பர்
அழல்மல்கு மெரியொடும் அணிமழு வேந்தி
ஆடுவர் பாடுவர் ஆரணங் குடையர்
பொழில்மல்கு நீடிய அரவமு மரவம்
மன்னிய கவட்டிடைப் புணர்குயி லாலும்
எழில்மல்கு சோலையில் வண்டிசை பாடும்
இடைச்சுர மேவிய இவர்வண மென்னே.
தேங்கமழ் கொன்றையந் திருமலர் புனைவார்
திகழ்தரு சடைமிசைத் திங்களுஞ் சூடி
வீந்தவர் சுடலைவெண் ணீறுமெய் பூசி
வேறுமோர் சரிதையர் வேடமு முடையர்
சாந்தமும் அகிலொடு முகில்பொதிந் தலம்பித்
தவழ்கன மணியொடு மிகுபளிங் கிடறி
ஏந்துவெள் ளருவிகள் எழில்திகழ் சாரல்
இடைச்சுர மேவிய இவர்வண மென்னே.
பலஇலம் இடுபலி கையிலொன் றேற்பர்
பலபுக ழல்லது பழியிலர் தாமுந்
தலையிலங் கவிரொளி நெடுமுடி யரக்கன்
தடக்கைகள் அடர்த்ததோர் தன்மையை யுடையர்
மலையிலங் கருவிகள் மணமுழ வதிர
மழைதவ ழிளமஞ்ஞை மல்கிய சாரல்
இலைஇல வங்கமும் ஏலமுங் கமழும்
இடைச்சுர மேவிய இவர்வண மென்னே.
பெருமைகள் தருக்கியோர் பேதுறு கின்ற
பெருங்கடல் வண்ணனும் பிரமனு மோரா
அருமையர் அடிநிழல் பரவிநின் றேத்தும்
அன்புடை யடியவர்க் கணியரு மாவர்
கருமைகொள் வடிவொடு சுனைவளர் குவளைக்
கயலினம் வயலிள வாளைகள் இரிய
எருமைகள் படிதர இளஅனம் ஆலும்
இடைச்சுர மேவிய இவர்வண மென்னே.
மடைச்சுர மறிவன வாளையுங் கயலும்
மருவிய வயல்தனில் வருபுனற் காழிச்
சடைச்சுரத் துறைவதோர் பிறையுடை யண்ணல்
சரிதைகள் பரவிநின் றுருகுசம் பந்தன்
புடைச்சுரத் தருவரைப் பூக்கமழ் சாரல்
புணர்மட நடையவர் புடையிடை யார்ந்த
இடைச்சுர மேத்திய இசையொடு பாடல்
இவைசொல வல்லவர் பிணியிலர் தாமே.
பதிகம் பாடி பல்லாண்டு வாழ்க.....திருச்சிற்றம்பலம்