செவ்வாய், 16 நவம்பர், 2010

மாலை அணியும் போது சொல்லவேண்டிய மந்திரம்

ஐயப்பனுக்கு மாலை அணியும் போது சொல்ல வேண்டிய மந்திரம்
ஞானமுத்ராம் சாஸ்த்ரமுத்ராம் குருமுத்ராம் நமாம்யஹம்
வனமுத்ராம் சுத்தமுத்ராம் ருத்ரமுத்ராம் நமாம்யஹம்
சாந்தமுத்ராம் சத்யமுத்ராம் வ்ரதமுத்ராம் நமாம்யஹம்
சபர்யாஸ்ரம சத்யேன முத்ராம் பாது சதாப்பிமே
குரு தட்சணையாபூர்வம் தஸ்யாணுஹ்ரக் காரிணே
சரணாகதமுத்ராக்யம் த்வன்முத்ராம் தாரயாம்யஹம்
சின்முத்ராம் கேசரி முத்ராம் பத்ர முத்ராம் நமாம்யஹம்
சபர்யாச்சல முத்ராயை நமஸ்துப்யம் நமோ நமஹ!

இன்று கார்த்திகை முதல் நாள் மற்றும் ஐயப்பன் பக்தர்கள் மாலை அணியும் நன்னாள். ஆகவே இந்த மந்திரம் சொல்லி மாலை அணிந்து மகிழுங்கள்
- சூரியா

வியாழன், 9 செப்டம்பர், 2010

சென்னிப்பத்து

சென்னிப்பத்து - இரண்டாவது பாடல்
அட்ட மூர்த்தி அழகன் இன்னமு தாய ஆனந்த வெள்ளத்தான்
சிட்டன் மெய்ச்சிவ லோக நாயகன் தென்பெ ருந்துறைச் சேவகன்
மட்டு வார்குழல் மங்கை யாளையோர் பாகம் வைத்த றன்
வட்ட மாமலர்ச் சேவ டிக்கண்நம் சென்னி மன்னி மலருமே.

இந்திரன், எமன், வாயு, வருணன், குபேரன், நிருதி, அக்னி மற்றும் ஈசானன் எனும் எட்டு மூர்த்திகளையும் தன்னுள் அடக்கி, இனிமையான அமுதாய், ஆனந்த வெள்ளமாய், பெருகும் சுந்தர வடிவாய், அனைத்திற்கும் மேலாய், சிவபுரத்தின் நாயகனாய், பெருந்துறை அடியார்களின் சேவகனாய், மகரந்தத் தேன் சொரியும் மணமுடைய கூந்தலுடைய எம் தாயை ஒருபாகம் வைத்து மாதொருபாகனய் நின்ற நின் வட்ட வடிவ செந்தாமரைப் போன்ற மலர்ப் பாதத்தில் எனது சிரமானது ஒளிரும்

வியாழன், 5 ஆகஸ்ட், 2010

ஒருதுளி உருகல்


மாணிக்க வாசகரின் சென்னிப்பத்து எனும் பத்து பாடல்களில் ஒரு பாடல்.....
திருவாசகம்.... ஒருவாசகம்....குருவாசகம்....
திருவாசகம் பாறைகளையே உருக்கும்போது இந்த சூரியன் எனும் பசும் நெய் என்ன செய்யும்?....

சென்னிப்பத்து

தேவ தேவன் மெய்ச்சேவகன் தென்பெருந்துறை நாயகன்
மூவராலும் அறிவொணா முதல் ஆய ஆனந்த மூர்த்தியான்
யாவர் ஆயினும் அன்பர் அன்றி அறிவொணா மலர்ச்சோதியான்
தூய மாமலர்ச் சேவடிக்கண் சென்னி மன்னிச் சுடருமே.

பொருள் :
தேவர்களுக்கெல்லாம் தேவன் ஆனவனும், தம் பக்தர்களின் உண்மைச் சேவகன் ஆனவனும், திருப்பெருந்துறையில் யோகாம்பாள் உடனுறை ஆத்ம நாதனாய் என் ஆத்ம நாயகனாய் இருப்பவனும், பிரம்மா, விஷ்ணு மற்றுமல்லாமல், தன்னையே தான் அறிய முடியாத பேரின்ப வடிவுடையவனும், யாராக இருப்பினும், தம் அடியார்கள் அன்றி வேறோருவர் அறிய முடியாத மலர்ந்த சோதி வடிவமானவனும் ஆன சிவபுரத்தரசனின் தூய மணம் பொருந்திய மலர் போன்ற திருவடியின் கீழ் எனது சிரம் மிக்க ஒளியுடன் விளங்கும்.

உருகி உருகி ஓடினாலும் உமையொருபாகனடி மட்டும்தேடியோடும்......சூரியா

செவ்வாய், 15 ஜூன், 2010

ஆலயத்திருவுலா...





ஆலயத்திருவுலா....
திருவடி சூலம்
இனிய உறவுகளே!
செங்கல்பட்டிலிருந்து திருக்கழுக்குன்றம் செல்லும் சாலையில் 3 கி மீ தூரத்தில் போருர் செல்ல ஒரு பாதை பிரியும். அந்த பாதையில் 3 கிமீ தூரம் சென்றால் கொப்புக் காடுகளுக்கிடையே ஒரு அலங்கார வளைவு தெரியும். அந்த வளைவினுள் சென்றால் அழகிய கிராமமும், சுமார் 1100 ஆண்டுகளுக்கு முந்திய தொண்டை மண்டல பாடல் பெற்ற தலமுமான திருவடி வலம் எனும் திருவடி சூலம் ஆலயம் நம்மை வரவேற்கும்.

மலைகள் சூழ்ந்த இயற்கை எழில் கொஞ்சும் ரம்மியமான இடத்தில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.

இறைவன் பெயர் : இடைச்சுர நாதர், ஞானபுரீஸ்வரர்
இறைவி பெயர் : கோவர்த்தனாம்பிகை ( மலைமகள்) இமயமடக்கொடி.

பெயர்க் காரணம் :

1. இறைவன் இடையர் வடிவில் சம்மந்தருக்கு காட்சியளித்ததால் இடைச்சுர நாதர் என்று அழைக்கப் படுகிறார்.

2. இறைவன் திருக் கச்சூரிலிருந்து திருக்கழுக்குன்றம் செல்லும் பொழுது தனது இடது பாதத்தையும், சூலத்தையும் வைத்த இடமாதலால் இடைச்சுர நாதர் என்றும், இந்த தலம் திருவடி சூலம் என்றும் வழங்கப்படுகிறது.

3. அம்மன் இறைவருக்கு பசு வடிவில் பால் கொடுத்த்தால் கோவர்த்தனாம்பிகை ( மலைமகள்) என்றும், இமயமடக்கொடி என்றும் அழைக்கப்படுகிறாள்.

சிறப்புகள் :

சுயம்பு மரகத லிங்கத்திருமேனி. தேனாபிஷேகம் செய்து ஆரத்தி காண்பிக்கும் போது இறைவனின் ஜோதி சொரூப தரிசனத்தைக் காண கண்கள் கோடி போதாது.
மிகவும் பழமை வாய்ந்த அமைதியான கற்கோயில். மகா வில்வம் உள்ள மிகச் சில ஆலயங்களில் இதுவும் ஒன்று. கௌதம மகரிஷியும், சனற்குமாரரும் வழிபட்ட தலம். இத்தலத்தில் சிவராத்திரி மிகவும் விசேஷம். அந்நாளில் நான்கு சாம வழிபாடுகளும் முறையாக நடைபெறுகின்றன. திரளானோர் வந்து தரிசிக்கின்றனர் : இதுதவிர பிரதோஷ பூஜைகள் சிறப்பாக நடைபெறுகின்றது.

பிரகாரத்தில் வில்வம், வேம்பு, ஆலமரம் ஆகிய மூன்று மரங்கள் இணைந்திருக்கிறது. சிவன், அம்பாள், விநாயகர் ஆகிய மூவரும் இம்மரத்தில் வடிவில் அருளுகின்றனர் என்பதால் இங்கு வேண்டிக்கொண்டால் பிரிந்திருக்கும் குடும்பங்கள் இணையும், ஒற்றுமை கூடும் என நம்புகின்றனர். சிவன் மறைந்த குளம் ""காட்சிக்குளம்'' என்ற பெயரில் தற்போதும் இருக்கிறது.

அமைப்பு :

இராஜ கோபுரமில்லை. முகப்பு வாயிலுக்கு முன்னால் இடப்பால் வரசித்தி விநாயகர் சந்நிதி உள்ளது. முகப்பு வாயில் தெற்கு நோக்கியது. வாயிலில் நுழைந்து விநாயகரைத் தொழுது, வலமாகப் பிராகாரம் சுற்றி வந்தால் பிரம்மாண்டேஸ்வரர் சந்நிதியும் அதையடுத்து பிரம்மாண்டேஸ்வரி சந்நிதியும் தனித்தனியே உள்ளன. கொடிமரம் இல்லை. பலிபீடம், நந்தி மட்டுமே உள்ளன. பக்கத்தில் வில்வமரம் ( மகா வில்வம் ) உள்ளது. உள்வாயிலில் நுழைந்து, மண்டபம் தாண்டி, வலமாகச் சுற்றி வந்தால் நால்வர் பிரதிஷ்டை உள்ளது. விநாயகர், சந்நிதியும், வள்ளி தெய்வயானை உடனாகிய சுப்பிரமணியர் சந்நிதியும் அடுத்து உள்ளன. அடுத்த தரிசனம் பைரவர். கருவறை அகழி அமைப்புடையது. நல்ல கற்றளி. மூலவர் சந்நிதிக்கு இருபுறமும் விநாயகரும் முருகப் பெருமானும் காட்சியளிக்கின்றனர். உள்ளே நுழைந்ததும் கருவறையுள் நேரே அம்பாள் (தெற்கு நோக்கி) காட்சி தருகின்றாள். நின்ற திருக்கோலம். சுவாமி கிழக்கு நோக்கிய தரிசனம். சதுரபீட ஆவூடையார்.

தலப் பெருமை

பல்லாண்டுகளுக்கு முன்பு வில்வ வனமாக இருந்த இப்பகுதிக்கு மேய்ச்சலுக்கு வந்த பசு ஒன்று மட்டும் சரிவர பால் தரவில்லை. சந்தேகப்பட்ட இடையன், அப்பசுவை கண்காணித்தபோது ஒரு புதருக்குள் சென்று பால் சொரிவதை கண்டான். இவ்விஷயத்தை அவன் ஊர் மக்களிடம் சொல்ல, அவர்கள் புதரை விலக்கி பார்த்தபோது சிவன் சுயம்பு மரகதலிங்கமாக இருந்ததைக் கண்டனர். பின் இவ்விடத்தில் கோயில் கட்டி வழிபட்டனர். அம்பிகையே பசு வடிவில், ஞானம் தரும் பாலை அபிஷேகித்து பூஜை செய்த சிவன் என்பதால் இவரை "ஞானபுரீஸ்வரர்' என்றும், அம்பாளை "கோவர்த்தனாம்பிகை' (கோ - பசு) என்றும் அழைக்கின்றனர். இவரிடம் வேண்டிக்கொண்டால் கல்வி ஞானம் பெறலாம் என்பது நம்பிக்கை.

அம்பாள் அமைப்பு: பொதுவாக அம்பாள் தன் பாதங்களை நேராக, ஒன்றோடு ஒன்று நேராக வைத்துத்தான் காட்சி தருவாள். ஆனால் இத்தலத்து அம்பாளோ தன் இடது காலை சற்று முன் வைத்து, வலது காலை பின்னே வைத்தபடி (நடந்து செல்வதற்கு தயாராகும் நிலையில்) காட்சி தருகிறாள். இந்த அமைப்பு வித்தியாசமானதாகும்.

சிவன், இடையன் வடிவில் திருஞானசம்பந்தரின் களைப்பை போக்க கிளம்பியபோது அம்பாளும் அவருடன் கிளம்பினாள். அவரோ, அம்பாளை தன்னுடன் அழைத்துச் செல்ல மறுத்தார். அம்பாள் சினத்துடன் காரணம் கேட்டாள்.

""திருஞானசம்பந்தன் நீ கொடுத்த ஞானப்பாலை குடித்தவன். தாயை தெரியாத குழந்தை உலகில் இருக்க முடியாது. எந்த குழந்தையும் தன் தாயை எளிதில் அடையாளம் கண்டுவிடும். நீ வந்தால் சம்பந்தன் எளிதில் நம்மை தெரிந்து கொண்டு விடுவான். அதனால் நீ இங்கேயே இரு!'' என சொல்லிவிட்டு சென்றுவிட்டார். இதனால்தான், அம்பாள் தன் காலை முன்வைத்து கிளம்பிய கோலத்திலேயே இருக்கிறாள் என்கின்றனர். காலில் ஊனம் உள்ளவர்கள் இவளிடம் வேண்டிக்கொண்டால் மனதில் அமைதி உண்டாகும்.
இத்தலத்து தெட்சிணாமூர்த்தியின் காலுக்கு கீழே இருக்கும் முயலகன் இடது பக்கம் திரும்பி படுத்த கோலத்தில் வித்தியாசமாக இருக்கிறான். தெட்சிணாமூர்த்தியை அவரது சீடர் சனத்குமாரர் வழிபட்டுள்ளார்

தல புராணம்

நால்வரில் ஒருவரான திருஞானசம்பந்தர் சிவதல யாத்திரையின் போது இவ்வழியாக சென்று கொண்டிருந்தார். நீண்ட தூரம் நடந்து வந்ததால் பசி வயிற்றைக் கிள்ளியது. சூரியன் உச்சிவானில் ஏற, ஏற வெயிலும் கூடியது. களைப்படைந்த சம்பந்தர் ஓய்வெடுக்க ஒரு மரத்தின் அடியில் அமர்ந்தார். அப்போது அங்கு கையில் சிறிய தடியுடன், கோவணம் கட்டியபடி மாடு மேய்க்கும் இடையன் ஒருவன் வந்தான். கையில் தயிர் களையம் வைத்திருந்த அவன், சம்பந்தர் பசியோடு இருந்ததை அறிந்து தயிரை பருக கொடுத்தான். களைப்பு நீங்கிய சம்பந்தரிடம் நீங்கள் யார்? என்று இடையன் கேட்க, அவர் தனது சிவதல யாத்திரையைப் பற்றி கூறினார். அவரிடம், இதே வனத்திலும் ஒரு சிவன் இருப்பதாக கூறிய இடையன், அங்கு வந்து பாடல் பாடி தரிசனம் செய்யும்படி கட்டாயப் படுத்தினான். இடையன் மூலமாக பசியாறிய சம்பந்தரால் அவனது சொல்லை தட்டமுடியவில்லை.

இடையனாக இருந்தாலும் அழகு மிகுந்தவனாக இருந்ததைக் கண்ட சம்பந்தர் மனதில் சந்தேகம் கொண்டாலும், "எல்லாம் சிவன் சித்தம்' என்றெண்ணிக் கொண்டு அவனை பின்தொடர்ந்தார். வழியில் ஒரு குளக்கரையில் நின்ற இடையன், சம்பந்தரை பார்த்து புன்னகைத்து விட்டு மறைந்து விட்டான். திகைத்த சம்பந்தர் சிவனை வேண்டினார். அவருக்கு காட்சி தந்த சிவன், இடையன் வடிவில் அருள்புரிந்ததை உணர்த்தினார். இடையனாக வந்து இடையிலேயே விட்டுவிட்டு சென்றதால் சிவனை, ""இடைச்சுரநாதா!'' என்று வணங்கி பதிகம் பாடினார் சம்பந்தர். சிவன் மரகத மேனியுடன் சுயம்புமூர்த்தியாக எழுந்தருளினார். "இடைச்சுரநாதர்' என்ற பெயரும் பெற்றார்

இதோ திருஇடைச்சுரம் பதிகம்

திரு இடைச்சுரம்
பண் - குறிஞ்சி

வரிவள ரவிரொளி யரவரை தாழ
வார்சடை முடிமிசை வளர்மதி சூடிக்
கரிவளர் தருகழல் கால்வல னேந்திக்
கனலெரி யாடுவர் காடரங் காக
விரிவளர் தருபொழில் இனமயி லால
வெண்ணிறத் தருவிகள் திண்ணென வீழும்
எரிவள ரினமணி புனமணி சாரல்
இடைச்சுர மேவிய இவர்வண மென்னே.

ஆற்றையு மேற்றதோர் அவிர்சடை யுடையர்
அழகினை யருளுவர் குழகல தறியார்
கூற்றுயிர் செகுப்பதோர் கொடுமையை யுடையர்
நடுவிரு ளாடுவர் கொன்றையந் தாரார்
சேற்றயல் மிளிர்வன கயலிள வாளை
செருச்செய வோர்ப்பன செம்முக மந்தி
ஏற்றையொ டுழிதரும் எழில்திகழ் சாரல்
இடைச்சுர மேவிய இவர்வண மென்னே.

கானமுஞ் சுடலையுங் கற்படு நிலனுங்
காதலர் தீதிலர் கனல்மழு வாளர்
வானமும் நிலமையும் இருமையு மானார்
வணங்கவும் இணங்கவும் வாழ்த்தவும் படுவார்
நானமும் புகையொளி விரையொடு கமழ
நளிர்பொழி லிளமஞ்ஞை மன்னிய பாங்கர்
ஏனமும் பிணையலும் எழில்திகழ் சாரல்
இடைச்சுர மேவிய இவர்வண மென்னே.

கடமணி மார்பினர் கடல்தனி லுறைவார்
காதலர் தீதிலர் கனல்மழு வாளர்
விடமணி மிடறினர் மிளிர்வதோ ரரவர்
வேறுமோர் சரிதையர் வேடமும் உடையர்
வடமுலை யயலன கருங்குருந் தேறி
வாழையின் தீங்கனி வார்ந்து தேனட்டும்
இடமுலை யரிவையர் எழில்திகழ் சாரல்
இடைச்சுர மேவிய இவர்வண மென்னே.

கார்கொண்ட கடிகமழ் விரிமலர்க் கொன்றைக்
கண்ணியர் வளர்மதி கதிர்விடக் கங்கை
நீர்கொண்ட சடையினர் விடையுயர் கொடியர்
நிழல்திகழ் மழுவினர் அழல்திகழ் நிறத்தர்
சீர்கொண்ட மென்சிறை வண்டுபண் செய்யுஞ்
செழும்புன லனையன செங்குலை வாழை
ஏர்கொண்ட பலவினொ டெழில்திகழ் சாரல்
இடைச்சுர மேவிய இவர்வண மென்னே.

தோடணி குழையினர் சுண்ணவெண் ணீற்றர்
சுடலையி னாடுவர் தோலுடை யாகப்
பீடுயர் செய்ததோர் பெருமையை யுடையர்
பேயுட னாடுவர் பெரியவர் பெருமான்
கோடல்கள் ஒழுகுவ முழுகுவ தும்பி
குரவமும் மரவமும் மன்னிய பாங்கர்
ஏடவிழ் புதுமலர் கடிகமழ் சாரல்
இடைச்சுர மேவிய இவர்வண மென்னே.

கழல்மல்கு காலினர் வேலினர் நூலர்
கவர்தலை யரவொடு கண்டியும் பூண்பர்
அழல்மல்கு மெரியொடும் அணிமழு வேந்தி
ஆடுவர் பாடுவர் ஆரணங் குடையர்
பொழில்மல்கு நீடிய அரவமு மரவம்
மன்னிய கவட்டிடைப் புணர்குயி லாலும்
எழில்மல்கு சோலையில் வண்டிசை பாடும்
இடைச்சுர மேவிய இவர்வண மென்னே.

தேங்கமழ் கொன்றையந் திருமலர் புனைவார்
திகழ்தரு சடைமிசைத் திங்களுஞ் சூடி
வீந்தவர் சுடலைவெண் ணீறுமெய் பூசி
வேறுமோர் சரிதையர் வேடமு முடையர்
சாந்தமும் அகிலொடு முகில்பொதிந் தலம்பித்
தவழ்கன மணியொடு மிகுபளிங் கிடறி
ஏந்துவெள் ளருவிகள் எழில்திகழ் சாரல்
இடைச்சுர மேவிய இவர்வண மென்னே.

பலஇலம் இடுபலி கையிலொன் றேற்பர்
பலபுக ழல்லது பழியிலர் தாமுந்
தலையிலங் கவிரொளி நெடுமுடி யரக்கன்
தடக்கைகள் அடர்த்ததோர் தன்மையை யுடையர்
மலையிலங் கருவிகள் மணமுழ வதிர
மழைதவ ழிளமஞ்ஞை மல்கிய சாரல்
இலைஇல வங்கமும் ஏலமுங் கமழும்
இடைச்சுர மேவிய இவர்வண மென்னே.

பெருமைகள் தருக்கியோர் பேதுறு கின்ற
பெருங்கடல் வண்ணனும் பிரமனு மோரா
அருமையர் அடிநிழல் பரவிநின் றேத்தும்
அன்புடை யடியவர்க் கணியரு மாவர்
கருமைகொள் வடிவொடு சுனைவளர் குவளைக்
கயலினம் வயலிள வாளைகள் இரிய
எருமைகள் படிதர இளஅனம் ஆலும்
இடைச்சுர மேவிய இவர்வண மென்னே.

மடைச்சுர மறிவன வாளையுங் கயலும்
மருவிய வயல்தனில் வருபுனற் காழிச்
சடைச்சுரத் துறைவதோர் பிறையுடை யண்ணல்
சரிதைகள் பரவிநின் றுருகுசம் பந்தன்
புடைச்சுரத் தருவரைப் பூக்கமழ் சாரல்
புணர்மட நடையவர் புடையிடை யார்ந்த
இடைச்சுர மேத்திய இசையொடு பாடல்
இவைசொல வல்லவர் பிணியிலர் தாமே.

பதிகம் பாடி பல்லாண்டு வாழ்க.....திருச்சிற்றம்பலம்

செவ்வாய், 18 மே, 2010

திரு அங்கமாலை

திரு அப்பர் சுவாமிகள் எழுதிய திரு அங்க மாலை எனும் பதிகம் மிகவும் சுவையானது. பூந்தமல்லியில் உள்ள தையல் நாயகி உடனுறை வைத்தீஸ்வரர் ஆலயத்தில் தினமும் பள்ளியறை பூசையின் போது பல இள வயது அன்பர்கள் முற்றோதுதல் செய்வது நெஞ்சுக்கு இதமளிப்பதாக இருக்கின்றது. இறைவர் பள்ளியறை செல்லும் போது இப்பாடலை அன்பர்கள் பாடக் கேட்டு மெய் மறந்து ஊன் உருகி யான் பெற்ற இன்பம் நீங்களும் பெற இதோ - திரு அங்க மாலை

திரு அங்கமாலை


தலையே நீ வணங்காய் - தலை
மாலைதலைத் தணிந்து
தலையாலேபலி தேருந்தலைவனைத்
தலையே நீ வணங்காய்

கண்காள் காண்மின்களோ - கடல்
நஞ்சுண்ட கண்டன் தன்னை
எண்டோள் வீசி நின்றாடும் பிராந்தன்னைக்
கண்காள் காண்மின்களோ

செவிகாள் கேண்மின்களோ - சிவ
னெம்மிறை செம்பவள
எரிபோல்மேனிப் பிரான்றிறமெப்போதுஞ்
செவிகாள் கேண்மின்களோ

மூக்கே நீ முகராய் -முது
காடுறை முக்கண்ணனை
வாக்கே நோக்கிய மங்கைமணாளனை
மூக்கே நீ முகராய்

வாயே வாழ்த்துகண்டாய் - மத
யானையுரி போர்த்துப்
பேய்வாழ்காட்டகத் தாடும் பிரான்றன்னை
வாயே வாழ்த்துகண்டாய்

நெஞ்சே நீ நினையாய் - நிமிர்
புன்சடை நின்மலனை
மஞ்சாடுமலை மங்கை மணாளனை
நெஞ்சே நீ நினையாய்
கைகாள் கூப்பித் தொழீர்-கடி
மாமலர் தூவி நின்று
பைவாய்ப் பாம்பரை யார்த்த பரமனை
கைகாள் கூப்பித் தொழீர்

ஆக்கையாற் பயனென் - அரன்
கோயில்வலம் வந்து
பூக்கையாலட்டிப் போற்றியென்னாதவிவ்
ஆக்கையாற் பயனென்

கால்களாற் பயனென் - கறைக்
கண்டனுறை கோயில்
கோலக் கோபுரக் கோகரணஞ் சூழாக்
கால்களாற் பயனென்

உற்றாரா ருளரோ - வுயிர்
கொண்டு போம்பொழுது
குற்றாலத்துறைகூத்தனல்லானமக்
குற்றாரா ருளரோ

இறுமாந் திருப்பன்கொலோ - வீசன்
பல்கணத் தெண்ணப்பட்டுச்
சிறுமானேந்தி தன் சேவடிக் கீழ் சென்றங்
கிறுமாந் திருப்பன்கொலே

தேடிக் கண்டு கொண்டேன் - திரு
மாலொடு நான்முகனுந்
தேடித் தேடொணாத் தேவனை யென்னுள்ளே
தேடிக் கண்டு கொண்டேன்

வெள்ளி, 7 மே, 2010

இன்னொரு துளி அமுதம்..

அபிராமி அந்தாதியில் இன்னொரு துளி அமுதம்....

நாயேனையும் இங்குஒரு பொருளாக நயந்துவந்து
நீயே நினைவின்றி ஆண்டுகொண்டாய் நின்னை உள்ளவண்ணம்
பேயேன் அறியும் அறிவு தந்தாய், என்ன பேறுபெற்றேன்
தாயே மலைமகளே செங்கண்மால் திருத் தங்க்கச்சியே!

பொருள்: நாயைப் போல கேவலமான பிறவியை உடைய இவனையும் ஒரு பொருளாக நினைத்து, நினைவில்லாமலே எமை ஆண்டு கொண்டாய். ( நினைவிருந்தால் கண்டிப்பாக இந்தப் பாவிக்கு அருள் செய்திருக்க மாட்டாய்). உன்னை உள்ள வண்ணம் அறியும் சிறந்த அறிவை இந்த பேயனுக்கு தந்தாய். நான் என்ன பேறு செய்தேனோ... எம் தாயே, திருமாலின் தங்கையே! மலை மகளே!

- செ சூரிய குமார்

ஞாயிறு, 11 ஏப்ரல், 2010

have fun

dear friends

புதன், 7 ஏப்ரல், 2010

உலக நலவாழ்வு தினம் 2010

இனிய உறவுகளே!

இதோ இன்னொரு கட்டுரை.


உலக நலவாழ்வு தினம் 2010

உலக நலவாழ்வு நிறுவனம் ( World Heath Organization - WHO ) துவங்கப்பட்ட நாளைக் கொண்டாடும் விழா இது. உலகெங்கும் சுகாதாரம் குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக உலக நலவாழ்வு நிறுவனம் செய்து வரும் பணிகளை நினைவுகூரும் தினமாக இது திகழ்கிறது. 1948ம் ஆண்டு உலக நலவாழ்வு நிறுவனத்தின் முதல் கூட்டம் அமைக்கப்பட்டபோது ஏப்ரல் மாதம் ஏழாம் தேதியை உலக நலவாழ்வு தினமாகக் கொண்டாடவேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. அதன் படி 1950ம் ஆண்டு முதல் இந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

உலக நலவாழ்வு நிறுவனம் ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வோர் முழக்கத்தை முன்வைத்து உலக நலவாழ்வு தினம் கொண்டாடுகிறது. கடந்த ஆண்டு சர்வதேச கைகள் கழுவும் தினமாக கொண்டாடியதை இப்பொழுது நினைவு கூர்கிறேன். இந்த ஆண்டு அறுபதாம் ஆண்டு. இதையொட்டி, நகரங்களை ஆரோக்கியமானவையாக ஆக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த, "ஆயிரம் நகரங்கள் - ஆயிரம் வாழ்க்கை" என்ற தலைப்பில் விழிப்புணர்வுப் பிரச்சாரம் மேற்கொள்ள இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. மேலும் நகரங்களில் ஆரோக்கியத்திற்காகச் செயல்படும் அமைப்புகளின், ஆயிரம் சாதனைக் கதைகளை தொகுத்து, அனைவரும் அறியச் செய்வது; மற்றும் பூங்காக்கள் போன்ற பொது இடங்களில் விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் ஆகியவற்றை திட்டமிட்டுள்ளது. நகரமயமாக்கல் பரவி வரும் சூழ் நிலையில் நகர மக்களின் நலனை முன்னிட்டு இந்த முழக்கம் செயல்படுத்தப் படுகின்றது.

- Dr J Suria Kumar MD

செவ்வாய், 2 மார்ச், 2010

இதோ இன்னொரு துளித் தேன்...

இனிய உறவுகளே!
இதோ இன்னொரு துளித் தேன்....
பருகுங்கள்....பரவசம் அடையுங்கள்.

அபிராமி அந்தாதி - பாடல் எண் -3

அறிந்தேன் எவரும் அறியா மறையை அறிந்துகொண்டு
செறிந்தேன் உனது திருவடிக்கே, திருவே! வெருவிப்
பிறிந்தேன் நின் அன்பர் பெருமை எண்ணாத கரும நெஞ்சால்
மறிந்தே விழு நரகுக்கு உறவாய மனிதரையே.

பொருள் : மேன்மை பொருந்தியவளே! நின் அன்பர்தம் பெருமையை போற்றாத கரும நெஞ்சம் கொண்டவர்கள் நரகத்திற்கு உறவாகியவர்கள். அப்படி பட்ட மனிதர்களை விட்டு நான் விலகி பிறிந்து விட்டேன். அதனால் எவராலும் அறிந்து கொள்ள முடியாத வேத நாயகித் தாயாம் நின்னை நன்கு அறிந்து உணர்ந்து பின்பு நின் திருவடியே கதி எனப் பற்றும் பேறு பெற்றேன்.

- ஜெ சூரிய குமார்.

வெள்ளி, 5 பிப்ரவரி, 2010

அபிராமி அந்தாதி

இனிய உறவுகளே!
சாக்தத்தில், ஒப்பில்லாத ஒரு தமிழ் வேதம் "அபிராமி அந்தாதி" என்பது யாவரும் அறிந்ததே. அபிராமி அந்தாதியை பாராயணம் செய்யும் போது அம்மனே அருகில் வந்து மகிழ்வுடன் ரசித்துக் கேட்பாள் என்பது அனுபவப்பூர்வமான ஒரு உண்மை. அந்த தமிழ் வேதத்திலிருந்து சில பாடல்களை தருகிறேன். பாராயணம் செய்து வாழ்க்கையின் ஏற்றத்தை உணருங்கள்.


சென்னியது உன் பொன் திருவடித் தாமரை; சிந்தையுள்ளே
மன்னியது உன் திருமந்திரம்; சிந்துர வண்ணப் பெண்ணே!
முன்னிய நின் அடியாருடன் கூடி முறை முறையே
பன்னியது என்றும் உந்தன் பரமாகமப் பத்ததியே!

(பாடல் எண் - 6, எழுதியவர் - அபிராமிப் பட்டர்)


பொருள் :

எந்தன் சிரம் மேல் உந்தன் தாமரை போன்ற திருவடிகளும் சிந்தையுள் உனது திருமந்திரமும் உள்ளது. செந்தூரம் போன்று சிவப்பு அழகு உடைய தாயே! எப்பொழுதும் உன் அடியார்களை முன்னிறுத்தி, அவர்களுடன் கூடியே எனது எல்லா செயல்களும் நடக்கின்றன. நான் அனுதினமும் பாராயணம் செய்வது உன்னுடைய உயர்ந்த ஆகமங்களையே.

வியாழன், 28 ஜனவரி, 2010

சிவநாம மகிமை

இனிய உறவுகளே,இக்கலிகாலத்தில் உய்ய சிறந்த முறை 'பகவான் நாம சங்கீர்த்தணம்' என்று பல புராணங்கள் உரைக்கின்றன. இதோ! சிவநாமத்தின் பெருமையை விளக்கும் ஒரு நல்ல பாடல் உங்களுக்காக....இதன் பெயர் சிவ நாம மகிமை....படியுங்கள்.... பலன் பெறுங்கள்....

சிவநாம மகிமை (சிவப்பிரகாச சுவாமிகள்)

வேத மாகமம் வேறும் பலப்பல
வோதி நாளு முளந்தடு மாறன்மின்
சோதி காணிருள் போலத் தொலைந்திடுந்
தீதெ லாமுஞ் சிவசிவ வென்மினே. 1

புல்ல ராயினும் போதக ராயினுஞ்
சொல்லவ ராயிற் சுருதி விதித்திடு
நல்ல வாகு நவையென் றகற்றிய
செல்ல றீருஞ் சிவசிவ வென்மினே. 2

நாக்கி னானு நயனங்க ளானுமிவ்
வாக்கை யானு மருஞ்செவி யானுநம்
மூக்கி னானு முயங்கிய தீவினை
தீர்க்க லாகுஞ் சிவசிவ வென்மினே. 3

சாந்தி ராயண மாதி தவத்தினான்
வாய்ந்த மேனி வருத்த விறந்திடாப்
போந்த பாகத மேனும் பொருக்கெனத்
தீந்து போகுஞ் சிவசிவ வென்மினே. 4

வில்லி தென்ன விளங்குந் திருநுதல்
வல்லி பங்கன் மலரடி காணிய
கல்வி நல்குங் கருத்து மகிழவுறுஞ்
செல்வ நல்குஞ் சிவசிவ வென்மினே. 5

தீய நாளொடு கோளின் செயிர்தவு
நோய கன்றிடு நூறெனக் கூறிய
வாயுள் பல்கு மறம்வளர்ந் தோங்குறுந்
தீய தீருஞ் சிவசிவ வென்மினே. 6

வருந்தி யாற்றி வளர்த்த கதிர்த்தலை
பொருந்து வான்பயிர் போற்றுநர் போலவே
விரிந்த வேணியில் வெண்மதி சூடிபின்
றிரிந்து காப்பன் சிவசிவ வென்மினே. 7

முந்தை யோர்சொன் மொழிந்து சிவனென
நிந்தை தானச் சிவனை நிகழ்த்தினும்
வந்த தீவினை மாற்றுவ னாதலாற்
சிந்தை யோடு சிவசிவ வென்மினே. 8

நீச ரேனும்வா னீசர் நிகழ்த்தில்வா
னீச ரேனுஞ் சிவசிவ வென்கிலார்
நீச ரேயென் றியம்புறு நின்றுப
தேச நூல்கள் சிவசிவ வென்மினே. 9

எண்ணி நெஞ்சிற் சிவசிவ வென்பவர்
வண்ண மென்பதங் கிட்டி வணங்கவு
முண்ண டுங்குவ னொண்டிறற் கூற்றுவன்
றிண்ண மீது சிவசிவ வென்மினே. 10
      
ஜெ.சூரிய குமார் 
 

தெய்வீகத் திருவுலா...

இனிய உறவுகளுக்கு,
கடந்த வாரம் நான் செங்கல்பட்டில் உள்ள திருத்தலங்களை தரிசித்தேன்.
திருக்கழுக்குன்றம் பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் அதன் அருகில் உள்ள ருத்ர கோடீஸ்வரர் ஆலயம் பற்றி பலருக்கு தெரிந்திருக்காது.

ருத்ரகோடீஸ்வரர் ஆலயமானது திருக்கழுக்குன்றத்தில் இருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இது திருக்கழுக்குன்றம் வேதபுரீஸ்வரர் மற்றும் பக்தவச்சலேஸ்வரர் ஆலயத்தைக் காட்டிலும் பழமையானது.
இங்கு கோடி ருத்திரர்கள் இறைவனை வழிபட்டு த்ங்கள் சாபம் நீங்கியதாக வரலாறு கூறுகிறது. மேலும் இங்கு நந்திகேஸ்வரர் கருட பகவானின் சிரத்தைக் கொய்தி ஆணவத்தை அடக்கியதாகவும் வரலாறு தொடர்கிறது. முத்லில் இத்தலத்தை தரித்த பின்னரே திருக்கழுக்குன்றம் செல்ல வேண்டும் என்று கூறுகிறார்கள்.
நடராஜர் மிகவும் அழகான தோற்றத்துடன் காட்சியளிப்பார். ருத்ர கோட்டீஸ்வரியோ சாந்த சொரூபியாக அருள் பாலிக்கிறாள்.

மிகவும் அமைதியான, ஊன் உருக்கி, உள்ளொளி எழுப்பி உவப்பிலா ஆனந்தம் அளிக்கும் தலம். ஒருமுறை தொழுதால் கோடி முறை தொழுத பலன் கிடைக்கும்.
நேரம் கிடைக்கும்போது சென்று வாருங்கள்.

திருவுலா தொடரும்

- சூரியன்

திங்கள், 4 ஜனவரி, 2010

திருமுறை

முன்னுரை:

நண்பர்களே, முதலில் மங்களகரமாக ஆரம்பிக்க விழைந்து 'அவன் அருளாலே அவன் தாள் வணங்கி' 8ஆம் திருமுறையிலிருந்து ஒரு பாடலைத் தருகிறேன். சரணாகதி என்பதின் தீர்க்கமான மற்றும் முழுமையான விளக்கத்தை எனக்கு உணர்த்திய பாடல் இது.
முந்தை வினை ஓய இதை உரைத்து சர்வ மங்களம் பெற்று சதாசிவன் அருள் பெற்று எந்நாளும் இன்புற்று இருக்க எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். நன்றி.

வேண்டத் தக்கது அறிவோய் நீ ! வேண்ட
முழுதும் தருவோய் நீ!
வேண்டும் அயன், மாற்கு அறியோய் நீ! வேண்டி
என்னைப் பணி கொண்டாய்:
வேண்டி, நீ யாது அருள் செய்தாய் ? யானும்
அதுவே வேண்டின் அல்லால்
வேண்டும் பரிசு ஒன்று உண்டு என்னில் அதுவும்
உந்தன் விருப்பன்றே!


வெள்ளி, 1 ஜனவரி, 2010

புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

அனைவருக்கும் எனது புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். விரைவில் சுவையான தகவல்களோடு உங்களை சந்திக்கிறேன்.