வெள்ளி, 30 செப்டம்பர், 2011

பயிர்செய்ய ஏற்ற நிலபுலங்கள் கிடைக்க....


நமக்கு சிறந்த நிலபுலங்கள் கிடைக்க....அபிராமி அந்தாதியின் 34ஆம் பாடலான இதை பாராயணம் செய்வோம்..




பாடல்
வந்தே சரணம் புகும் அடியாருக்கு வானுலகம்
தந்தே பரிவொடு தான் போய் இருக்கும் சதுர்முகமும்
பைந்தேன் அலங்கல் பருமணி ஆகமும் பாகமும் பொற்
செந்தேன் மலரும் அலர் கதிர் ஞாயிறும் திங்களுமே


பொருள்
பிறவிப்பெருங்கடல் கடக்க...வடிவுடைநாயகியான உன் திருவடிகளே சரியான வழி என்று உம் தாமரை போன்ற பொற் பாதங்களை சரணம் என தஞ்சம் அடைந்த அடியவர்களுக்கு, சேயின் மீது தாய் கொண்ட பாசத்தோடு, அவர் தம்மை ஆட்கொண்டு, நீ என்றும் உறையும் இடங்களான....வேத நாதத்தால் மூவுலகிலும் படைப்பை நிகழ்த்தும் நான்முகனில் கலைமகளாக உறையும் நாவையும், சுகந்த மகரந்தம் நிரம்பிய மதுவைச் சொரியும் மலர்களையும், ஒளிவீசும் மாணிக்கங்களையும் அணிந்த மாலனில் அலைமகளாக உறையும் மார்பையும், படமெடுக்கும் அரவணிந்து நடனமாடும் சிவபுரத்தரசனில் மலைமகளாக மேனியில் உறையும் இடப்பாகத் திருமேனியையும், பொன்னிற தேன் கொண்ட தாமரையையும், சந்திரனையும், சூரியனையும் காட்டி.....அதற்கு மேல்... கருணையும் பரிவும் காட்டி, மண்ணவரை விண்ணவராக்கும் வித்தகியே!....உம்மை வணங்குகின்றேன்..


சரபனே சரணம் எனும் - ஜெ. சூரியா

திங்கள், 26 செப்டம்பர், 2011

போற்றித்திருவகவல்....


மாணிக்கவாசக சுவாமிகள் அருளிய "போற்றித்திருவகவலில் என் மனம் கவர்ந்த ஒருபாதி..மறுபாதியை புரியும் அளவிற்கு எனக்கு அறிவு போதவில்லை...புரிந்தபின்...அது பொருளொடு .என் வலைப்பூவை அலங்கரிக்கும்.....


------------------------------------------------------------
------------------------------------------------------
சாயா அன்பினை நாள்தொரும் தழைப்பவர் 
தாயே ஆகி வளர்த்தனை போற்றி 
மெய் தரு வேதியன் ஆகி வினைகெடக் 
கைதரவல்ல கடவுள் போற்றி 
ஆடக மதுரை அரசே போற்றி


கூடல் இலங்கு குருமணி போற்றி 
தென் தில்லை மன்றினுள் ஆடி போற்றி 
இன்று எனக்கு ஆர் அமுது ஆனாய் போற்றி 
மூவா நான்மறை முதல்வா போற்றி 
சேவார் வெல்கொடிச் சிவனே போற்றி 
மின் ஆர் உருவ விகிர்தா போற்றி 
கல் நார் உரித்த கனியே போற்றி 
காவாய் கனகக் குன்றே போற்றி 
ஆ ஆ என்தனக்கு அருளாய் போற்றி 
படைப்பாய் காப்பாய் துடைப்பாய் போற்fறி 


இடரைக் களையும் எந்தாய் போற்றி 
ஈச போற்றி இறைவா போற்றி 
தேசப் பளிங்கின் திரளே போற்றி 
அரைசே போற்றி அமுதே போற்றி 
விரை சேர் சரண விகிர்தா போற்றி 
வேதி போற்றி விமலா போற்றி 
ஆதி போற்றி அறிவே போற்றி 
கதியே போற்றி கனியே போற்றி 
நதி நேர் நெஞ்சடை நம்பா போற்றி 
உடையாய் போற்றி உணர்வே போற்றி 


கடையேன் அடிமை கண்டாய் போற்றி 
ஐயா போற்றி அணுவே போற்றி 
சைவா போற்றி தலைவா போற்றி 
குறியே போற்றி குணமே போற்றி 
நெறியே போற்றி நினைவே போற்றி 
வானோர்க்கு அரிய மருந்தே போற்றி 
ஏனோர்க்கு எளிய இறைவா போற்றி 
மூவேழ் சுற்றமும் முரண் உறு நரகு இடை 
ஆழாமே அருள் அரசே போற்றி 
தோழா போற்றி துணைவா போற்றி 


வாழ்வே போற்றி என் வைப்பே போற்றி 
முத்தா போற்றி முதல்வா போற்றி 
அத்தா போற்றி அரனே போற்றி 
உரைஉணர்வு இறந்த ஒருவ போற்றி 
விரிகடல் உலகின் விளைவே போற்றி 
அருமையில் எளிய அழகே போற்றி 
கருமுகி லாகிய கண்ணே போற்றி 
மன்னிய திருவருள் மலையே போற்றி 
என்னையும் ஒருவ னாக்கி இருங்கழல் 
சென்னியில் வைத்த சேவக போற்றி 


தொழுதகை துன்பந் துடைப்பாய் போற்றி 
அழிவிலா ஆனந்த வாரி போற்றி 
அழிவதும் ஆவதும் கடந்தாய் போற்றி 
முழுவதும் இறந்த முதல்வா போற்றி 
மான்நேர் நோக்கி மணாளா போற்றி 
வான்அகத்து அமரர் தாயே போற்றி 
பார்இடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி 
நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி 
தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி 
வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி 


வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி 
அளிபவர் உள்ளதது அமுதே போற்றி 
கனவிலும் தேவர்க்கு அரியாய் போற்றி 
நனவிலும் நாயேற்கு அருளினை போற்றி 
இடைமருது உறையும் எந்தாய் போற்றி 
சடைஇடைக் கங்கை தரித்தாய் போற்றி 
ஆரூர் அமர்ந்த அரசே போற்றி 
சீர் ஆர் திருவையாறா போற்றி 
அண்ணாமலை எம் அண்ணா போற்றி 
கண் ஆர் அமுதக் கடலே போற்றி


ஏகம்பத்து உறை எந்தாய் போற்றி 
பாகம் பெண் உரு ஆனாய் போற்றி 
பராய்த் துறை மேவிய பரனே போற்றி 
சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி 
மற்று ஓர் பற்று இங்கு அறியோன் போற்றி 
குற்றாலத்து எம் கூத்தா போற்றி 
கோகழி மேவிய கோவே போற்றி 
ஈங்கோய் மலை எந்தாய் போற்றி 
பாங்கு ஆர் பழனத்து அழகா போற்றி 
கடம்பூர் மேவிய விடங்கா போற்றி 


அடைந்தவர்க்கு அருளும் அப்பா போற்றி 
இத்தி தன்னின் கீழ் இருமூவர்க்கு 
அத்திக்கு அருளிய அரசே போற்றி 
தென்னாடுடைய சிவனே போற்றி 
என் நாட்டவர்க்கும் இறைவா போற்றி 
ஏனக் குருளைக்கு அருளினை போற்றி 
மானக் கயிலை மலையாய் போற்றி 
அருளிட வேண்டும் அம்மான் போற்றி 
இருள் கெட அருளும் இறைவா போற்றி 
தளர்ந்தேன் அடியேன் தமியேன் போற்றி 


களம் கொளக் கருத அருளாய் போற்றி 
அஞ்சேல் என்று இங்கு அருளாய் போற்றி 
நஞ்சே அமுதா நயந்தாய் போற்றி 
அத்தா போற்றி ஐயா போற்றி 
நித்தா போற்றி நிமலா போற்றி 
பத்தா போற்றி பவனே போற்றி 
பெரியாய் போற்றி பிரானே போற்றி 
அரியாய் போற்றி அமலா போற்றி 
மறையோர் கோல நெறியே போற்றி 
முறையோ தரியேன் முதல்வா போற்றி 


உறவே போற்றி உயிரே போற்றி 
சிறவே போற்றி சிவமே போற்றி 
மஞ்சா போற்றி மணாளா போற்றி 
பஞ்சு ஏர் அடியான் பங்கா போற்றி 
அலந்தேன் நாயேன் அடியேன் போற்றி 
இலங்கு சுடர் எம் ஈசா போற்றி 
கவைத்தலை மேவிய கண்ணே போற்றி 
குவைப்பதி மலிந்த கோவே போற்றி 
மலை நாடு உடைய மன்னே போற்றி 
கலை ஆர் அரிகேசரியாய் போற்றி


திருக்கழுக் குன்றில் செல்வா போற்றி 
பொருப்பு அமர் பூவணத்து அரனே போற்றி 
அருவமும் உருவமும் ஆனாய் போற்றி 
மருவிய கருணை மலையே போற்றி 
துரியமும் இறந்த சுடரே போற்றி 
தெரிவு அரிது ஆகிய தெளிவே போற்றி 
தோளா முத்தச் சுடரே போற்றி 
ஆள் ஆனவர்களுக்கு அன்பா போற்றி 
ஆரா அமுதே அருளா போற்றி 
பேர் ஆயிரம் உடைப் பெம்மான் போற்றி 


தாளி அறுகின் தாராய் போற்றி 
நீள் ஒளி ஆகிய நிருத்தா போற்றி 
சந்தனச் சாந்தின் சுந்தர போற்றி 
சிந்தனைக்கு அரிய சிவமே போற்றி 
மந்திர மாமலை மேயாய் போற்றி 
எந்தமை உய்யக் கொள்வாய் போற்றி 
புலிமுலை புல் வாய்க்கு அருளினை போற்றி 
அலைகடல் மீ மிசை நடந்தாய் போற்றி 
கரும் குருவிக்கு அன்று அருளினை போற்றி 
இரும் புலன் புலர இசைந்தனை போற்றி 


படி உறப் பயின்ற பாவக போற்றி 
அடியொடு நடு ஈறு ஆனாய் போற்றி 
நரகொடு சுவர்க்க நானிலம் புகாமல் 
பரகதி பாண்டியற்கு அருளினை போற்றி 
ஒழிவற நிறைந்த ஒருவ போற்றி 
செழு மலர்ச் சிவபுரத்து அரசே போற்றி 
கழு நீர் மாலைக் கடவுள் போற்றி 
தொழுவார் மையல் துணிப்பாய் போற்றி 
பிழைப்பு வாய்ப்பு ஒன்று அறியா நாயேன் 
குழைத்த சொல்மாலை கொண்டருள் போற்றி 


புரம்பல் எரித்த புராண போற்றி 
பரம் பரம் சோதிப் பரனே போற்றி 
போற்றி போற்றி புயங்கப் பெருமான் 
போற்றி போற்றி புராண காரண 
போற்றி போற்றி சய சய போற்றி


திருச்சிற்றம்பலம்
மாணிக்கவாசக சுவாமிகள் திருவடிகளுக்கு வந்தனம்....

வியாழன், 22 செப்டம்பர், 2011

மரணாவஸ்தையிலும் அம்பிகையின் நினைவு அகலாதிருக்க...


எந்த நிலையிலும்...அருள்வடிவாய் விளங்கும் அபிராமியின் நினைவு...சிந்தையிலிருந்து சிதறாமலிருக்க... பாடுவோம் இப்பாடலை...


பாடல்
இழைக்கும் வினை வழியே அடும் காலன் எனை நடுங்க
அழைக்கும் பொழுது வந்து அஞ்சல் என்பாய் அத்தர் சித்தம் எல்லாம்
குழைக்கும் களபக் குவிமுலை யாமளைக் கோமளமே
உழைக்கும் போது உன்னையே அன்னையே என்பன் ஓடி வந்தே


பொருள்
என்னால் செய்யப்பட்ட கர்ம காரியங்களால் ஏற்பட்ட வினைக்கேற்ப, என் வினைக்கேற்ற விலை கொடுக்க, நான் நடு நடுங்க எமன் என்னை அழைத்துச் செல்லும் போது...நான் காலனின் பாசத்தில் சிக்கி மரணவேதனையில் அவஸ்தைப் படும் அக்கணத்திலும் உன்னை மட்டுமே அன்னையென்று அழைப்பேன்...அப்போது ... அத்தனும், சித்தனும், பித்தனுமான பிறைசூடிய சந்திர மௌலீஸ்வரனாம் சிவனின் சித்தத்தைக் குழைக்கக் கூடிய சந்தன மணம் வீசும் குவிந்த தனங்களையுடய கோமளவல்லித் தாயே..நீ என் முன் விரைவாக ஓடி வந்து...பயப்பட வேண்டாம் என்று எமக்கு ஆறுதல் அளித்துக் காப்பாய்....




நாகமணிந்தானின் திருவடியை மோகம் கொள்ளும் - ஜெ. சூரியா


செவ்வாய், 20 செப்டம்பர், 2011

அகால மரணமும், துர் மரணமும் உண்டாதிருக்க....


அகால மரணம் அண்டாமலிருக்க....பாராயணம் செய்வோம்...


பாடல்
ஆசைக்கடலில் அகப்பட்டு அருளற்ற அந்தகன் கைப்
பாசத்தில் அல்லற்பட இருந்தேனை நின் பாதம் என்னும்
வாசக் கமலம் தலை மேல் வலிய வைத்து ஆண்டு கொண்ட
நேசத்தை என் சொல்லுவேன் ஈசர் பாகத்து நேரிழையே




பொருள்
ஆசையெனும் இந்த மாயக்கடலில் அகப்பட்டு, பிறவிப் பெருங்கடல் நீந்த இயலாமல், தன் கடனில் சிறிதும் வழுவா, இரக்கமற்ற எமனேஸ்வரனின் பாசக்கயிற்றால் பிணைக்கப்பட்டு எல்லையிலா துன்பங்களுக்கு ஆளாக இருந்தேன்....அப்படிப்பட்ட என்னை, உமது மணம் கமழும் பொற்றாமரை போன்ற திருவடியை, தானாக...நீயே வலிய வந்து எம் சிரசில் பதித்து எம்மை ஆண்டு கொண்டாய்....இப்படிப்பட்ட உம் தாயன்பினை என்ன சொல்லி புகழுவேன்?....ஈசனின் இடப்பாகமலங்கரிக்கும் பேரழகே வடிவானவளே!


அரவு சூடிய அண்ணலை தன் சிரவு சூடிய - ஜெ. சூரியா 

மறுமையில் இன்பம் உண்டாக...


பிறவிப் பிணியறுத்து...மறுமையில் இன்பம் உண்டாக....பாடுவோம் இப்பாடலை....


பாடல்
உமையும் உமையொரு பாகனும் ஏக உருவில் வந்து இங்கு
எமையும் தமக்கு அன்பு செய்ய வைத்தார் இனி எண்ணுதற்குச்
சமையங்களும் இல்லை ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை
அமையும் அமையுறு தோளியர் மேல் வைத்த ஆசையுமே


பொருள்
மலைமகன் மகளே!, பொடி பூசி அம்பலமாடும் கரியுரியானின் திருமேனியில் இடப்பாகத்தில் இடம் கொண்டவளே! மங்கையும், கங்கைகொண்ட மங்கைபங்கனும், அனைத்தும் அடங்கிய ஒரே உருவில் வந்து...கேடுகெட்ட ஈனப்பிறவியான என்னை தங்கள் திருவடி வருடி அன்பு செய்ய பணித்து அருள் மழை பொழிந்தீர்கள்..இனி நான் பின்பற்ற எந்த மதமும், நெறியும், மார்க்கமும், பாதையும், வழியும்..இல்லை..இனி எனக்கு பிறவிகள் கிடையாது....ஆகவே இனி என்னை ஈன்றெடுக்க ஒரு தாயும் கிடையாது....பெண், பொன் மீது வைத்த பந்தமும் நீங்கி, சலனமற்ற நீரோடையாய் மனம் உன் திருவடி நோக்கி பயணிக்கின்றது....


காட்டாடும் பிரானுக்கு கனகமணி சூட்டும் ஜெ. சூரியா

வெள்ளி, 16 செப்டம்பர், 2011

அடுத்தடுத்து வரும் ஆபத்துக்கள் நீங்க...


தொடர்ந்து வரும் தொல்லைகள் அகல, அடுத்தடுத்து வரும் ஆபத்துக்கள் நீங்க...இப்பாடலைப் பாராயணம் செய்யுங்கள்..


பாடல்
அன்றே தடுத்து என்னை ஆண்டு கொண்டாய் கொண்டதல்ல என்கை
நன்றே உனக்கு இனி நான் என் செயினும் நடுக்கடலுள்
சென்றே விழினும் கரையேற்றுகை நின் திருவுளமோ
ஒன்றே பல உருவே அருவே என் உமையவளே 


பொருள்
என்றுன்னை மனதில் வைத்தேனோ அன்றே என்னை நீ ஆட்கொண்டாய்..உம் அருளால் எம்மை மீளா அடிமை கொண்டாய்....ஆட்கொண்டு, அடிமை கொண்ட பின் நான் உன் உடமையாகிவிட்டேன்......உம் உடமையை உதறுவது உலகம் உய்யும் உமைக்கு உகந்ததாகுமா?  இனிமேல் நான் என்ன செய்தாலும், மதிகெட்டு, நடுகடலில் போய் விழுந்தாலும்...அதையெல்லாம் பொறுத்துக் காத்து சேயாகிய எம்மை (பிறவிக்) கரையேற்ற வேண்டியது தாயாகிய உம் திருவுளமாகும்....ஒன்றானவளே!...பலவுருவானவளே!...உருவமும் அருவமும் ஆனவளே!...எம் உமையே...உம்மை போற்றுகின்றேன்...


ஈசனடி நேசன் - ஜெ. சூரியா

வியாழன், 15 செப்டம்பர், 2011

அணிமாதி அஷ்ட சித்திகள் பெற....


வையம் வசப்பட...அஷ்ட சித்திகள் பெற......அம்மை அருளிட...இப்பாடலை பாராயணம் செய்யுங்கள்...


பாடல்
சித்தியும் சித்தி தரும் தெய்வம் ஆகித் திகழும் பரா
சக்தியும் சக்தி தழைக்கும் சிவமும் தவம் முயல்வார்
முத்தியும் முத்திக்கு வித்தும் வித்தாகி முளைத்து எழுந்த
புத்தியும் புத்தியினுள்ளே புரக்கும் புரத்தை அன்றே




பொருள்
அட்டமாசித்திகள் எனும் 1. அணிமா (உடலைப் பஞசினும் ஒய்யதாக மாற்றி பிறர் கண்களுக்குத் தோன்றாது மறைத்தல்), 2. மகிமா (உடலை புதாகாரமாகத் தோன்றச் செய்தல்) 3. கரிமா (உடலை யானையைப் போன்று கனமாக்குதல்) 4. லகுமா (உடலை தக்கையைப் போல் இலேசாக்குதல்) 5. பிராப்தி (தமது ஆற்றலால் வெயில் மழை முதலிய கால நிலைகளை மாறச் செய்தல்)6. பிரகாமியம் (கூடுவிட்டுக் கூடுபாய்தல் நினைத்தவர் முன்னால் உடனே தோன்றுதல்) 7. ஈசத்துவம் (ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தொழில்களைச் செய்தல்) 8. வசித்துவம் (தெய்வங்களைத் தன் வயப்படுத்துதல்) எனும் எட்டு வகையான அபூர்வ சக்தியானவளே!  சக்தியாய் ஆனது மட்டுமல்லாமல் நின்னடி போற்றும் அடியார்க்கு, அந்த அஷ்ட சித்திகள் கைக்கூட காரணமாயிருக்கும்..சக்திகளில் தலைசிறந்த சக்தியாய்...பராசக்தியாய் விளங்குபவளே! முதல் மூவரையும் பெற்றவளே! உன்னில் உருவான சிவம் மூலம் உன்னை எண்ணித் தவமியற்றுபவர்க்கு பிறவா வரம் தந்து,  மோட்ச வீடுபேறடையும் எண்ணமும், அந்த எண்ணத்தை செயலாக்கும் வண்ணம் எம் சிந்தையில் அமர்ந்து நல்வழி காட்டி,  எம் எண்ணங்களை சுத்தி செய்து எம்மை என்றும் இமைபோல் காக்கும் உமையவளே!... 


நிலையாமை பேசி நிலைத்து நின்ற பட்டினத்தான் பாதம் பற்றும் -ஜெ. சூரியா

செவ்வாய், 13 செப்டம்பர், 2011

இம்மை மறுமை இன்பங்கள் அடைய


இவ்வுலகவாழ்விலும்....மேலுலக வாழ்விலும் எல்லா நன்மைகளும் பெற ...இதோ ஒரு பாடல்.....


பாடல்
சொல்லும் பொருளும் என நடமாடும் துணைவருடன் 
புல்லும் பரிமளப் பூங்கொடியே நின் புதுமலர்த்தாள்
அல்லும் பகலும் தொழும் அவர்க்கே அழியா அரசும்
செல்லும் தவநெறியும் சிவலோகமும் சித்திக்குமே.

பொருள்
மெய்யில் உயிர் கலந்தது போல ..நள்ளிரவில்ஆனந்தத் தாண்டவம் பயின்றாடும் விரிசடையானுடன்....சொல் பொருளுமாய்..சொல்லே பொருளுமாய்....சொல்லும் பொருளுமாய்...சொல்லா பொருளுமாய்...அர்த்தமாகி அனர்த்தமாகி, ஆனந்தமாகி, அர்த்தநாரியுமாகி நிற்கும் சுகந்த மணம் வீசும் அழகிய பச்சைநிறக் கொடி போன்றவளே! .அனுதினமும், இரவும் பகலும், இன்று பூத்த வாச மலராய் பாசம் காட்டும் நின் தாளிணை சிரம் கொண்டு வணங்கும் அடியார்களுக்கு இம்மையில் அழிவிலா அரச சுகங்களும், பின் நின் திருவடிகளை தேடி மோட்ச வீடு பெறும் திண்ணமாகிய தவ வாழ்வும், திருவடி சேவையினால் மறுமையில் அமரருக்கெல்லாம் அமரராகும் நித்திய சிவலோக வாழ்க்கையும் கைகூடும்.....

காமதகனம் செய்தவனை தன் கோபதகனம் செய்ய தவமியற்றும்- ஜெ. சூரியா