செவ்வாய், 21 ஆகஸ்ட், 2012

உலகினை வசப்படுத்த...


உலகம் வசப்பட இப்பாடலை பாராயணம் செய்வோம்..

பாடல்
இடம் கொண்டு விம்மி, இணைகொண்டு இறுகி, இளகி, முத்து
வடம்கொண்ட கொங்கை மலை கொண்டு, இறைவர் வலிய நெஞ்சை
நடம்கொண்ட கொள்கை நலங்கொண்ட நாயகி நல்லரவின்
படங்கொண்ட அல்குல் பனிமொழி வேதப்பரிபுரையே.


பொருள்
அம்மையாகிய உம்மிடத்தில் இருக்கும் பெருமிதத்தால் பருத்தும், ஒன்றுடன் ஒன்று இணையாகவும், தளர்ச்சியின்றி இறுக்கமாகவும், செழித்தும், குழைந்தும், இளகியும், வடம் போன்ற முத்து மாலையை தாங்கியும் உள்ள மலை போன்ற தனங்களைக் கொண்டு....எம் இறைவராம்...எதற்கும் அசராதவராம்....காமனை எரித்தவராம்....
ஈசரின்  வலிமை மிகுந்த நெஞ்சை உம் எண்ணத்திற்கு ஏற்றபடி ஆட்டுவிக்கும் திறம் கொண்ட எம் தாயே...எல்லா நலங்களையும் எமக்கருள்தலையே கொள்கையாகக் கொண்ட நாயகியே....நல்ல பாம்பின் படம் போன்ற அல்குலை உடையவளே!...இனிமையும் குளுமையும் நிறைந்த சொற்களாலான வேதங்களையே உம் கால் சிலம்பாய் அணிந்துள்ளவளே..
மூவுலகாளும் ஈசரை வசியப்படுத்திய உம் திருமேனி எழில் கண்டால்...இவ்வுலகம் மட்டுமல்ல..மூவுலகமும் வசப்படும்....இது திண்னம்...


கல்யானைக்கு கரும்பு கொடுத்தானுக்கு..சொல்மாலை சூட்டும் - மரு. ஜெ. சூரியா


வெள்ளி, 17 ஆகஸ்ட், 2012

நல்லடியார் நட்புப் பெற...


பதினாறு பேறுகளில் கபடு வாராத நட்பும் ஒன்று...அப்படி மனதில் சிறிதும் கபடு அற்றவர்கள் அன்னையின் அடியார்கள்..அந்த நல்லடியார்களின் நட்பை பெற்று நலம் பெற வாழ இப்பாடல் பாடுவோம்...

பாடல்:
புண்ணியம் செய்தனமே மனமே! புதுப் பூங்குவளைக்
கண்ணியும், செய்ய கணவரும் கூடி நம் காரணத்தால்
நண்ணி இங்கே வந்து தம் அடியார்கள் நடுவிருக்கப்
பண்ணிநம் சென்னியின் மேல் பத்மபாதம் பதித்திடவே.


பொருள் :
என்ன புண்ணியம் செய்துள்ளாய் மனமே!..இப்போதே மலர்ந்த கருங்குவளை மலர்களையொத்த அழகிய அருள் ததும்பும் விழிகளுடன் உலகைக் காக்கும் ஜகன் மாதாவான அபிராமி அன்னையும்...கறுத்த கழுத்தும், சிவத்த உடலும் கொண்ட செம்பொன் மேனியான்..ஆலவாய் அண்ணலும் சேர்ந்து எம்மை ஆட்கொண்டு அருளும் காரணத்திற்காக மிகவும் விருப்பத்துடன் யாமிருக்கும் இவ்விடம் தேடி வந்ததுடன் அல்லாமல்...எம்மை தம் அடியார் கூட்டத்தின் நடுவே இருக்கச் செய்து...எம்மையும் அடியாராகவே பாவித்து....எம் சிரத்தின் மேல் தம் கமலம் போன்ற பாதம் பதித்திட்டு வீடு, பேறு, முக்தி, மோட்சம் அனைத்தையும் அருளினீர்....இதற்காக என்ன புண்ணியம் செய்துள்ளாய் மனமே....

காமனை எரித்தவனை.....காலனை மிதித்தவனை....காவிய நாயகனை...ஆவியுருக துதிக்கும் - மரு. ஜெ. சூரியா

திங்கள், 13 ஆகஸ்ட், 2012

பூர்வ புண்ணியம் பலன்தர...


நமது பூர்வ புண்ணியம் பலன் தர சர்வம் சக்திமயமாய் நிற்கும் அபிராமியை அன்பால் கட்டும் இப்பாடலை பாராயணம் செய்வோம்.

பாடல்
வாணுதல் கண்ணியை, விண்ணவர் யாவரும் வந்திறைஞ்சிப்
பேணுதற்கு எண்ணிய எம்பெருமாட்டியைப் பேதைநெஞ்சில்
காணதற்கு அண்ணியள் அல்லாத கன்னியைக் காணும் அன்பு
பூணுதற்கு எண்ணிய எண்ணமன்றோ முன்செய் புண்ணியமே.

பொருள்: 
ஒளி பொருந்திய தன் அழகிய நெற்றியிலே கயல் போன்ற கண்ணைக் கொண்டு முக்கண்ணியாய் அருள் பாலிப்பவளே! விண்ணுலகில் வாழும் முப்பத்து முக்கோடி தேவர்களும் வந்து வந்தனம் செய்து அருள் பெற பேருவகையுடன் விரும்பும் எம் தாயை...ஒன்றுமறியா இந்த நாயேனின் பேதை நெஞ்சு, தேவருக்கும், மூவருக்கும், யாவருக்கும் காணக்கிடைக்காத கன்னியான உன்னை காணவேண்டும் என்று மிகவும் பாசத்துடன் பேராசைப்பட்டது......அவ்வாறு உன் அருள் பெற என் மனம் ஆசைப்பட்டதற்கு காரணம்....அந்த எண்ணம் எழக் காரணம் நான் முற்பிறவியில் செய்த புண்ணியம் தவிர வேறு என்னவாய் இருக்க முடியும்?..

இடரினும் தளரினும் உனது கழல் மட்டுமே தொழும் - மரு. ஜெ. சூரியா


சனி, 4 ஆகஸ்ட், 2012

கருவிகளைக் கையாளும் வலிமை பெற...


அன்னையே..  எல்லாம் நின் செயல்...நாம் வெறும் கருவி மட்டுமே...இந்தக் கருவி, கருவிகளை திறம்படக் கையாளும் வலிவு பெற இப்பாடலை பாராயணம் செய்து பயனுறுவோம்....

பாடல்
ஆளுகைக்கு உந்தன் அடித்தாமரைகள் உண்டு அந்தகன்பால்
மீளுகைக்கு உந்தன் விழியின் கடை உண்டு மேல் இவற்றின்
மூளுகைக்கு என் குறை நின் குறையே அன்று முப்புரங்கள்
மாளுகைக்கு அம்பு தொடுத்த வில்லான் பங்கில் வாணுதலே

பொருள்:
எம்மை ஆள்வதற்கு உனது கமலம் போன்ற பாதங்கள் உள்ளன... உமது கமலம் போன்ற பாதம் பற்றினால் மூஉலகாளும் பேறு உண்டு.......நீ எம்மை ஆண்டால் யாம் மூஉலகாள்வோம்.....கடமை தவறாத பயங்கரமான பாசக்கயிற்றுடன் துரத்தும் யமனேஸ்வரனிடமிருந்து எம்மைக் காக்க உமது கடைக்கண் பார்வை உண்டு.....மார்க்கண்டேயரைக் காக்க சிவனார் காலசம்ஹார மூர்த்தியாக அவதாரமெடுத்து, யமனை வதைத்து மார்க்கண்டேயரை மீட்டார்....ஆனால் பாவியேனை மீட்க உமது ஒரு சிறிய விழியோர பார்வையே போதுமானது தாயே!......உம் தாள் எம்மை ஆளாமலிருப்பதற்கும், உம் கடைக்கண் பார்வை எம்மேல் படாமலிருப்பதிற்கும் காரணம் நானும் எனது பாவச்செயல்களும்  மட்டுமல்ல...பஞ்சமா பாதகங்கள் செய்த போதும் தஞ்சமென்று வந்து விட்டால் தானேற்றுக் காக்கும் எந்தாய் செவ்வாய்ப்பேட்டை ஸ்ரீ காளியம்மனாகிய நீ உமது சேயாகிய எமை மறந்ததும் கூட ஒரு காரணமாகும். அன்று முப்புரம் எரிக்க வில்லேந்தி தன் பார்வையினாலே திரிபுர தகனம் செய்த ருத்ரனின் இடப்பாகம் வாசம் செய்யும் அழகிய ஒளி வீசும் நெற்றியை உடைய அம்பிகையே...உம்மை வணங்குகின்றேன்...


மறையுடையானை தோலுடையானை வார்சடைமேல் வளரும் பிறையுடையானை போற்றி வணங்கும் நெறிவுடையான் - மரு. ஜெ. சூரியா





வெள்ளி, 3 ஆகஸ்ட், 2012

வேண்டியதை வேண்டியவாறு அடைய


அனைவருக்கும் ஏதாவது ஒரு விருப்பம் இருக்கும். அந்த விருப்பம் நிறைவேற.....வேண்டியதை வேண்டியவாறு அடைய.... இந்த பாடலை பாராயணம் செய்யுமாறு வேண்டுகின்றேன்.


பாடல்
பவளக் கொடியில் பழுத்த செவ்வாயும், பனிமுறுவல்
தவளத் திருநகையும் துணையா எங்கள் சங்கரனைத்
துவளப் பொருது துடியிடை சாய்க்கும் துணை முலையாள்
அவளைப் பணிமின் கண்டீர் அமராவதி ஆளுகைக்கே.


பொருள் :
பவளக் கொடியில் நன்கு பழுத்த செம்பவளம் போன்று சிவந்த உதடுகளையும், அந்த உதடுகளினூடே வெண்முத்துக்கள் போன்று பிரகாசிக்கும் பற்களையும், எம் இதயத்தை குளிர வைக்கும் புன்முறுவலையும் உம் பலமாகக் கொண்டு உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியோன், தலைமாலை தலைக்கணிந்த பிரான், என் தலைவன் சர்வேஸ்வரனுடன் போரிட்டு, அந்த மகாதேவனின் மாதவத்தைக் கலைத்து, அவரை மகிழ்விக்கச் செய்த உடுக்கை போன்ற மெல்லிடையும், அந்த மெல்லிடையை சாய்க்கின்ற வகையில் ஒன்றுக்கொன்று துணையாய் அமைந்த தனங்களையும் உடையவளே! உமையே..உம்மை பணிந்தால் மட்டுமே தேவலோகமாளும் இந்திர பதவி திண்ணம் என்பதை உணர்ந்து உம்மை துதிக்கின்றோம்.... 


நால் வேத நாயகனின் கால் பாதம் பணியும் - மரு. ஜெ. சூரியா

வியாழன், 2 ஆகஸ்ட், 2012

நவமணிகளைப் பெற ....



பொருளிலார்க்கு இவ்வுலகமில்லை...அருளொடு பொருள் சேர.....நவமணிகள் பெற்று நலமாய் வாழ பாராயணம் செய்வோம்.....

பாடல்
கைக்கே அணிவது கன்னலும் பூவும்; கமலம் அன்ன
மெய்க்கே அணிவது வெண்முத்து மாலை; விட அரவின்
பைக்கே அணிவது பண்மணிக்கோவையும் பட்டும், எட்டுத்
திக்கே அணியும் திருவுடையான் இடம் சேர்பவளே!


பொருள் :
தாயே, அடி முதல் நுனி வரை சுவை தரும் உனது நாமத்தை  போன்ற கரும்பையும், வாசம் வீசும் மலர்களையும் உனது கனகக் கரங்களில் அணிந்து அவைகளுக்கு அணி சேர்க்கின்றாய். செந்தாமரை போன்ற நின் செந்தூர மேனியில் வெண்ணிறத்தில் ஜொலிக்கும் முத்துமாலைகளை அணிந்துள்ளாய்....திருநீலகண்டனின் கண்டத்தை சுற்றி படமெடுக்கும் கொடும் நஞ்சுடை நாகப்படம் போன்ற உன் மெல்லிடையில் நாக மாணிக்கம் போன்ற விலை மதிப்பற்ற நவரத்தின மணிகளையும், பார்த்தவர் கண்கவர் வண்ணப்பட்டாடையும் அணிந்துள்ளாய்...எட்டுத் திசைகளையும் அவற்றை ஆளும் அஷ்ட திக்பாலர்களான கிழக்கு - இந்திரன், தென்கிழக்கு - அக்னி, தெற்கு - யமன், தென்மேற்கு - நிருதி, மேற்கு - வருணன், வடமேற்கு - வாயு, வடக்கு - குபேரன், வடகிழக்கு- ஈசான்யன் எனும் தேவர்களையும் தனது உடமையாக அணிந்து, சகல செல்வங்களையும் தன்னகத்தே கொண்டுள்ள என்னப்பன் ஆலவாயனின் இடப்பாகம் சேர்ந்து பாகம் பிரியாளாய் பக்தர்களின் சோகம் களைகின்றாய்....




முப்புறமெரித்தானை முக்கண்ணனை முந்தைவினை ஓய்வோனை முக்காலமும் நினைந்துருகும் - மரு. ஜெ. சூரியா