சனி, 30 ஜூலை, 2011

முக்தி நலம் பெருக...


இம்மையும் மறுமையும் நன்றாய் அமைய ஓதுவோம் இதனை...


பாடல் :
நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பதுன்னை
என்றும் வணங்குவது உன் மலர்த் தாள் எழுதாமறையின்
ஒன்றும் அரும்பொருளே அருளே உமையே இமயத்து
அன்றும் பிறந்தவளே அழியா முத்தி ஆனந்தமே


பொருள்:
நான் நிற்கும் போதும், நடக்கும் போதும், அமரும் போதும், கிடக்கும் போதும் மேலும் எந்த நிலையிலும், எந்த செயலிலும் நினைப்பது உன்னையே! என்றும் என் சிரமும் கரமும் வணங்குவது உந்தன் மலர் போன்ற திருவடிகளையே! எழுதப்படாத (எழுத முடியாத) வேதப் பொருளாய் என் உணர்வுகளில் ஒன்றியவளே! கருணையுடன் கூடிய அருள் வடிவானவளே! எம்மை கண்ணிமையாய்க் காக்கும் உமையே! மலையரசனுக்கு மகளாய் அன்று இமயத்தில் அவதரித்த மலைமகளே! பர்வதவர்தினியே! என்றுமே அழியாத ஆனந்தமான முக்தியை அளிப்பவளே!


சிவபுரத்தரசனை "சிக்" கெனப் பிடித்த - ஜெ. சூரியா

வெள்ளி, 29 ஜூலை, 2011

சர்வ வசியம் உண்டாக....


இதைப் பாராயணம் செய்தால்....சர்வ வசியம் மட்டுமல்ல...அந்த சர்வேஸ்வரியே வசியப்படுவாள்...


பாடல் :
கருத்தன, எந்தைதன் கண்ணன, வண்ணக் கனகவெற்பின்
பெருத்தன, பால் அழும் பிள்ளைக்கு நல்கின, பேர் அருள்கூர்
திருத்தன பாரமும் ஆரமும் செங்கைச் சிலையும் அம்பும்
முருத்தன மூரலும் நீயும் அம்மே வந்து என் முன் நிற்கவே


பொருள் :
கரிய நிறம் கொண்ட, திருநீலகண்டனாம் மாதொரு பாகனின் கண்களில் நின்று அவன் கருத்தைக் கவர்ந்த, வண்ணமிகு மந்திர மாமலையாம் மேருவை விட பெரிய, உம் கனத்த திருத்தனங்களால், ஞான சம்மந்தன் போல் அழுத பிள்ளைக்கு பாலும், பேரருளும் தந்து பசியாற்றி உலக உயிர்களுக்கெல்லாம் அன்னையாய் நின்றாய். 
இப்படி பெரும் கருணை கொண்ட நின் மார்பும், அதை அலங்கரிக்கும்  மாலைகளும், உமது சிவந்த கரங்களில் வில்லும் அம்பும் பூண்டு,  முருக்கம் பூ போன்ற மென்மையான, நெருக்கமான, சிவந்த உம் இதழ்களில் புன்னகையும் தரித்து என் முன்னே தோன்ற வேண்டும்.


தில்லையானிடம் எல்லையில்லாக் கடன்பட்ட - ஜெ. சூரியா....

வியாழன், 28 ஜூலை, 2011

பற்றுகள் நீங்கி பக்தி பெருகிட .....

உலக பற்றுக்கள் நீங்கி, பக்தியெனும் மணம் பெருகிட பாடுவோம் இந்த பாடலை ....

கண்ணா...இன்னொரு துளி அமுதம் குடிக்க ஆசையா.... அப்படின்னா இதைப் படிச்சுப்பாரு....

பாடல் :
சுந்தரி எந்தை துணைவி என் பாசத் தொடரையெல்லாம்
வந்தரி சிந்துர வண்ணத்தினாள் மகிடன் தலைமேல்
அந்தரி நீலி அழியாத கன்னிகை ஆரணத்தோன்
கந்தரி கைத்தலத்தாள் மலர்த்தாள் என் கருத்தனவே

பொருள்:
அழகில் சிறந்தவளே! எம்பெருமானுக்கு துணைவியாகவும் என்னுடைய எல்லா செயல்களுக்கும் துணையாகவும் நிற்பவளே! என்னைத் தொடர்ந்து வந்து துன்பங்களைத் தரும் பந்த பாசங்களை அறுப்பவளே! செந்தூரம் அணிந்த சிவந்த வண்ண மேனியளே! எருமை முகம் கொண்ட மகிஷாசூரனை வதைத்து, அவன் தலைமேல் நின்ற துர்க்கையளே! நீல நிறம் கொண்ட காளியாய் நின்றவளே! உலகிற்கே தாயான போதிலும், என்றுமே இந்த சேயின் மேல் குன்றாத இரக்கம் காட்டுவதில்  கன்னியளே! வேதங்களை கையில் சுமக்கும் பிரம்மதேவனின் அகந்தையினால், கொய்யப்பட்ட அவரது ஐந்தாவது சிரத்தைக் கையில் கொண்டவளே! உனது மலர் போன்ற பாதங்கள் எப்போதும் என் சிந்தையில் நிற்குமே!

- தாயுமானவனின் சேயுமானவன் - சூரியா....

புதன், 27 ஜூலை, 2011

மலையான துன்பம் பனியாய் கரைய...


மலையான துன்பம் பனியாய் கரைய.....சொல்லுங்கள் இந்த துதியை....
அபிராமி அந்தாதியின் ஏழாம் பாடல்....

பாடல் :
ததியுறு மத்திற் சுழலும் என் ஆவி தளர்விலதோர்
கதியுறு வண்ணம் கருது கண்டாய் கமலாலயனும்
மதியுறு வேணி மகிழ்நனும் மாலும் வணங்கி என்றும்
துதியுறு சேவடியாய் சிந்துரானன சுந்தரியே...

பொருள் :
சுழல்கின்ற மத்திடை அகப்பட்ட தயிரினைப் போல, இங்கு பிறப்பு-இறப்பு என்று சுழலும் மத்திடை அகப்பட்டு தளர்ந்து போகும் என் ஆவியைத் தாங்கி, தளராமலிருக்க வகை செய்து மோட்ச உலகிற்கு வழி காட்டினாய். தாமரையில் உறையும் நான்முகனும், இடப்பாகம் உமக்களித்து மகிழ்ந்திருக்கும் பிறையணிந்த எம்பெருமானும், செங்கண்மாலும் என்றும் போற்றுகின்ற பாதங்களை உடைய சிவந்த செந்தூரமணிந்த பேரழகே வடிவானவளே!


அபிராமி அந்தாதி எனும் அமுதம் அனுதினமும் அருந்தும் ஆலவாயான் அடியான் சூர்யா 

புதன், 13 ஜூலை, 2011

எனக்குப் பிடித்த பாடல்...

எனக்குப் பிடித்த பாடல்...

உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் இப்பாடலை பொருளுணர்ந்து சொல்லி அருள் மழையில் நனைவோம். 

முத்தணி கொங்கைகள் ஆட ஆட    மொய்குழல் வண்டினம் ஆட ஆடச்
சித்தஞ் சிவனொடும் ஆட ஆடச்    செங்கயற் கண்பனி ஆட ஆடப்
பித்தெம் பிரானொடும் ஆட ஆடப்    பிறவி பிறரொடும் ஆட ஆட
அத்தன் கருணையொ டாட ஆட    ஆடப்பொற் சுண்ணம் இடித்தும் நாமே. 

பொருள்: 
முத்துக்களால் அலங்கரிக்கப்பட்ட தனங்கள் ஆடவும், அடர்ந்த கருமையான கூந்தலில் உள்ள வண்டினங்கள் ஆடவும், சிவந்த மீன்   போன்ற கண்கள் பணித்து ஆடவும், சிந்தனை முழுதும் சிவன் மேல் வைத்து ஆடவும், இப்பிறவி யாரோடு ஆடினாலும் பேரன்பினை மட்டும் சிவன் மேல் வைத்து ஆடவும், அந்த சிவபுரத்தரசன் நம்மேல்  கருணை வைத்து ஆடவும்   நாம் வாசமிகு  பொற் சுண்ணம் இடிப்போமாக

இவன் - அவன் - எல்லாமே சிவன் எனும் சூரியா