வீட்டில் கல்யாண வயதில் பெண்ணிருந்தால், நல்மணம் நிகழ நறுமணமிக்க இப்பாடலை பாராயணம் செய்யுங்கள்
பாடல்
அதிசயமான வடிவுடையாள், அரவிந்தமெல்லாம்
துதிசய ஆனன சுந்தரவல்லி, துணைஇரதி
பதிசயமானது அபசயம் ஆக முன் பார்த்தவர் தம்
மதிசயமாக அன்றோ வாமபாகத்தை வவ்வியதே.
பொருள்:
அதிசயங்களுக்கெல்லாம் அதிசயமானவள் அதிசயமான வடிவழகுடன் இருப்பது அதிசயமில்லையாயினும் அது அபிராமி பட்டருக்கு அதிசயமாக இருக்கின்றது. அல்லி, தாமரை மற்றும் அழகென்று சொல்லும் அத்தனை மலர்களின் அழகையும் தன் அழகால் வென்று அவைகளால் என்றும் துதிக்கப்படும் வல்லமை பொருந்திய பேரழகியே! ரதிமணாளனாம் மன்மதனை வென்றோர் யாருளரோ எனும் போது தன் நெற்றிக் கண்ணால் மன்மதனை எரித்து காமதகனம் புரிந்த அடல்விடையேறும் எம்பெருமானை, உன் கடைக்கண்ணால் கண்டு, மதி மயங்கச்செய்து , அவர்தம் இடப்பாகம் கவர்ந்து பாகம் பிரியாளாய் நின்றவளே! காமம் கொன்றானை மோகம் கொள்ள வைத்ததனால்..நீ ...அதிசயங்களுக்கெல்லாம் அதிசயமான வடிவழகுடையவள்.
தேவார நாயகனை தன் நாவாரப் போற்றும் - ஜெ. சூரியா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக