யாருக்குத்தான் ஆசையில்லை? பெருஞ்செல்வமும் பேரின்பமும் பெற அனுதினமும் அன்னயை இந்தப் பாடலால் ஆராதியுங்கள்...
பாடல்
தண்ணளிக்கு என்று முன்னே பல கோடி தவங்கள் செய்வார்
மண்ணளிக்கும் செல்வமோ பெறுவார் மதி வானவர் தம்
விண்ணளிக்கும் செல்வமும் அழியா முக்தி வீடும் அன்றோ
பண்ணளிக்கும் சொல் பரிமள யாமளைப் பைங்கிளியே
பொருள்
தாயே! நீ ஜோதிவடிவாய்,தீமைகளை அழிக்கும் ஆங்காரமாய், உக்ர காளியாய், வக்ர காளியாய், ருத்ர சொருபியாய் நின்றாலும், உம் சேயாம் இந்த மண்ணுலக மாந்தர்களுக்கு உனது அருள் என்றுமே மிகவும் குளிர்ச்சியானது. அந்த குளிர்ந்த அருளைப் பெற பல கோடி விதமான பக்திகள் செய்து தவங்கள் இயற்றுகின்றனர். அந்த பக்திக்கான நோக்கம் விண்ணுலகம் வாழ்ந்து என்றும் அழியா ஆனந்தம் நல்கும் முக்தி எனும் வீடு பேறு பெறுதலே ஆகும். ஆனால் நீயோ மறுமையில் முக்தியும் வீடுபேறும் மட்டுமின்றி, இம்மையிலும் இம்மண்ணுலக செல்வங்களையும் மழை போல், தக்க சமயத்திற்கு வாரி வழங்கி சமயபுரம் மாரியாய் வீற்றிருக்கின்றாய். அருளும் பொருளும் அளிக்கும் அரும்பொருளே! சொல்லும் சொல்லெல்லாம் நன்மணம் வீசும் இசையாய் யாழைப்பழித்த மொழியாளே! பச்சைக்கிளியை கையிலேந்திய பசுங்கிளியே! மரகதப்பச்சை மேனிகொண்டு, மகரக் கொடியும் கொண்டு மதுரையையும் ஆளும் மீனாட்சியே! ஈசனாரின் தோழியே!
முக்கண்ணனை எக்கணமும் வரிக்கும் - ஜெ. சூரியா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக