திங்கள், 31 அக்டோபர், 2011

கடிமணம் நிகழ...


ஒரு பெரிய இடைவெளிக்குப்பின் எழுத தொடங்குகின்றேன்...இது ஆத்மா களிப்புறும் வேள்வி....
கடிமணம் நிகழ இப்பாடலை பாராயணம் செய்வோம்...


பாடல்
திங்கட் பகவின் மணம் நாறும் சீறடி சென்னி வைக்க
எங்கட்கு ஒரு தவம் எய்தியவா எண் இறந்த விண்ணோர்
தங்கட்கும் இந்தத் தவம் எய்துமோ தரங்கக் கடலுள்
வெங்கட் பணி அணை மேல் துயில் கூரும் விழுப்பொருளே


பொருள்
சின்னஞ்சிறிய, மதியைப் போல் வளைந்து, மணம் வீசும் குளிர்ந்த நின் திருப்பாதங்களை, இப்பாவியேன் சிரம் வைக்க...அதுவும் வலிய வந்து....ஆண்டுகொள்ள...நான் என்ன புண்ணியம் செய்தேனோ?...எவ்வாறு இது சாத்தியப்பட்டது?...ஒருவேளை எனக்கே தெரியாமல்...அல்லது என்னையறியாமல் செய்த ஏதோ ஒரு புண்ணியமாக இருக்குமோ....நீ உன்னையறியாமலே இந்த நாயிற்கடையான சேய்க்கு நற்கதி ஈந்தாய்....முப்பத்து முக்கோடியும் தாண்டிய விண்ணகத்து அமரர்க்கு இந்த தவம் அமையுமா? அலைவீசும் திருப்பாற்கடலில் வெப்பம் உமிழும் விழியுடை ஆதிசேஷனை பஞ்சனையாய் கொண்டு...அறிதுயில் கொள்ளும்...சங்கு, சக்கரம் கதை ஏந்திய எம் வைஷ்ணவி தாயே...




பாசுபதம் அளித்தானின் பரமபதம் பற்றும் - ஜெ. சூரியா

வெள்ளி, 30 செப்டம்பர், 2011

பயிர்செய்ய ஏற்ற நிலபுலங்கள் கிடைக்க....


நமக்கு சிறந்த நிலபுலங்கள் கிடைக்க....அபிராமி அந்தாதியின் 34ஆம் பாடலான இதை பாராயணம் செய்வோம்..




பாடல்
வந்தே சரணம் புகும் அடியாருக்கு வானுலகம்
தந்தே பரிவொடு தான் போய் இருக்கும் சதுர்முகமும்
பைந்தேன் அலங்கல் பருமணி ஆகமும் பாகமும் பொற்
செந்தேன் மலரும் அலர் கதிர் ஞாயிறும் திங்களுமே


பொருள்
பிறவிப்பெருங்கடல் கடக்க...வடிவுடைநாயகியான உன் திருவடிகளே சரியான வழி என்று உம் தாமரை போன்ற பொற் பாதங்களை சரணம் என தஞ்சம் அடைந்த அடியவர்களுக்கு, சேயின் மீது தாய் கொண்ட பாசத்தோடு, அவர் தம்மை ஆட்கொண்டு, நீ என்றும் உறையும் இடங்களான....வேத நாதத்தால் மூவுலகிலும் படைப்பை நிகழ்த்தும் நான்முகனில் கலைமகளாக உறையும் நாவையும், சுகந்த மகரந்தம் நிரம்பிய மதுவைச் சொரியும் மலர்களையும், ஒளிவீசும் மாணிக்கங்களையும் அணிந்த மாலனில் அலைமகளாக உறையும் மார்பையும், படமெடுக்கும் அரவணிந்து நடனமாடும் சிவபுரத்தரசனில் மலைமகளாக மேனியில் உறையும் இடப்பாகத் திருமேனியையும், பொன்னிற தேன் கொண்ட தாமரையையும், சந்திரனையும், சூரியனையும் காட்டி.....அதற்கு மேல்... கருணையும் பரிவும் காட்டி, மண்ணவரை விண்ணவராக்கும் வித்தகியே!....உம்மை வணங்குகின்றேன்..


சரபனே சரணம் எனும் - ஜெ. சூரியா

திங்கள், 26 செப்டம்பர், 2011

போற்றித்திருவகவல்....


மாணிக்கவாசக சுவாமிகள் அருளிய "போற்றித்திருவகவலில் என் மனம் கவர்ந்த ஒருபாதி..மறுபாதியை புரியும் அளவிற்கு எனக்கு அறிவு போதவில்லை...புரிந்தபின்...அது பொருளொடு .என் வலைப்பூவை அலங்கரிக்கும்.....


------------------------------------------------------------
------------------------------------------------------
சாயா அன்பினை நாள்தொரும் தழைப்பவர் 
தாயே ஆகி வளர்த்தனை போற்றி 
மெய் தரு வேதியன் ஆகி வினைகெடக் 
கைதரவல்ல கடவுள் போற்றி 
ஆடக மதுரை அரசே போற்றி


கூடல் இலங்கு குருமணி போற்றி 
தென் தில்லை மன்றினுள் ஆடி போற்றி 
இன்று எனக்கு ஆர் அமுது ஆனாய் போற்றி 
மூவா நான்மறை முதல்வா போற்றி 
சேவார் வெல்கொடிச் சிவனே போற்றி 
மின் ஆர் உருவ விகிர்தா போற்றி 
கல் நார் உரித்த கனியே போற்றி 
காவாய் கனகக் குன்றே போற்றி 
ஆ ஆ என்தனக்கு அருளாய் போற்றி 
படைப்பாய் காப்பாய் துடைப்பாய் போற்fறி 


இடரைக் களையும் எந்தாய் போற்றி 
ஈச போற்றி இறைவா போற்றி 
தேசப் பளிங்கின் திரளே போற்றி 
அரைசே போற்றி அமுதே போற்றி 
விரை சேர் சரண விகிர்தா போற்றி 
வேதி போற்றி விமலா போற்றி 
ஆதி போற்றி அறிவே போற்றி 
கதியே போற்றி கனியே போற்றி 
நதி நேர் நெஞ்சடை நம்பா போற்றி 
உடையாய் போற்றி உணர்வே போற்றி 


கடையேன் அடிமை கண்டாய் போற்றி 
ஐயா போற்றி அணுவே போற்றி 
சைவா போற்றி தலைவா போற்றி 
குறியே போற்றி குணமே போற்றி 
நெறியே போற்றி நினைவே போற்றி 
வானோர்க்கு அரிய மருந்தே போற்றி 
ஏனோர்க்கு எளிய இறைவா போற்றி 
மூவேழ் சுற்றமும் முரண் உறு நரகு இடை 
ஆழாமே அருள் அரசே போற்றி 
தோழா போற்றி துணைவா போற்றி 


வாழ்வே போற்றி என் வைப்பே போற்றி 
முத்தா போற்றி முதல்வா போற்றி 
அத்தா போற்றி அரனே போற்றி 
உரைஉணர்வு இறந்த ஒருவ போற்றி 
விரிகடல் உலகின் விளைவே போற்றி 
அருமையில் எளிய அழகே போற்றி 
கருமுகி லாகிய கண்ணே போற்றி 
மன்னிய திருவருள் மலையே போற்றி 
என்னையும் ஒருவ னாக்கி இருங்கழல் 
சென்னியில் வைத்த சேவக போற்றி 


தொழுதகை துன்பந் துடைப்பாய் போற்றி 
அழிவிலா ஆனந்த வாரி போற்றி 
அழிவதும் ஆவதும் கடந்தாய் போற்றி 
முழுவதும் இறந்த முதல்வா போற்றி 
மான்நேர் நோக்கி மணாளா போற்றி 
வான்அகத்து அமரர் தாயே போற்றி 
பார்இடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி 
நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி 
தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி 
வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி 


வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி 
அளிபவர் உள்ளதது அமுதே போற்றி 
கனவிலும் தேவர்க்கு அரியாய் போற்றி 
நனவிலும் நாயேற்கு அருளினை போற்றி 
இடைமருது உறையும் எந்தாய் போற்றி 
சடைஇடைக் கங்கை தரித்தாய் போற்றி 
ஆரூர் அமர்ந்த அரசே போற்றி 
சீர் ஆர் திருவையாறா போற்றி 
அண்ணாமலை எம் அண்ணா போற்றி 
கண் ஆர் அமுதக் கடலே போற்றி


ஏகம்பத்து உறை எந்தாய் போற்றி 
பாகம் பெண் உரு ஆனாய் போற்றி 
பராய்த் துறை மேவிய பரனே போற்றி 
சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி 
மற்று ஓர் பற்று இங்கு அறியோன் போற்றி 
குற்றாலத்து எம் கூத்தா போற்றி 
கோகழி மேவிய கோவே போற்றி 
ஈங்கோய் மலை எந்தாய் போற்றி 
பாங்கு ஆர் பழனத்து அழகா போற்றி 
கடம்பூர் மேவிய விடங்கா போற்றி 


அடைந்தவர்க்கு அருளும் அப்பா போற்றி 
இத்தி தன்னின் கீழ் இருமூவர்க்கு 
அத்திக்கு அருளிய அரசே போற்றி 
தென்னாடுடைய சிவனே போற்றி 
என் நாட்டவர்க்கும் இறைவா போற்றி 
ஏனக் குருளைக்கு அருளினை போற்றி 
மானக் கயிலை மலையாய் போற்றி 
அருளிட வேண்டும் அம்மான் போற்றி 
இருள் கெட அருளும் இறைவா போற்றி 
தளர்ந்தேன் அடியேன் தமியேன் போற்றி 


களம் கொளக் கருத அருளாய் போற்றி 
அஞ்சேல் என்று இங்கு அருளாய் போற்றி 
நஞ்சே அமுதா நயந்தாய் போற்றி 
அத்தா போற்றி ஐயா போற்றி 
நித்தா போற்றி நிமலா போற்றி 
பத்தா போற்றி பவனே போற்றி 
பெரியாய் போற்றி பிரானே போற்றி 
அரியாய் போற்றி அமலா போற்றி 
மறையோர் கோல நெறியே போற்றி 
முறையோ தரியேன் முதல்வா போற்றி 


உறவே போற்றி உயிரே போற்றி 
சிறவே போற்றி சிவமே போற்றி 
மஞ்சா போற்றி மணாளா போற்றி 
பஞ்சு ஏர் அடியான் பங்கா போற்றி 
அலந்தேன் நாயேன் அடியேன் போற்றி 
இலங்கு சுடர் எம் ஈசா போற்றி 
கவைத்தலை மேவிய கண்ணே போற்றி 
குவைப்பதி மலிந்த கோவே போற்றி 
மலை நாடு உடைய மன்னே போற்றி 
கலை ஆர் அரிகேசரியாய் போற்றி


திருக்கழுக் குன்றில் செல்வா போற்றி 
பொருப்பு அமர் பூவணத்து அரனே போற்றி 
அருவமும் உருவமும் ஆனாய் போற்றி 
மருவிய கருணை மலையே போற்றி 
துரியமும் இறந்த சுடரே போற்றி 
தெரிவு அரிது ஆகிய தெளிவே போற்றி 
தோளா முத்தச் சுடரே போற்றி 
ஆள் ஆனவர்களுக்கு அன்பா போற்றி 
ஆரா அமுதே அருளா போற்றி 
பேர் ஆயிரம் உடைப் பெம்மான் போற்றி 


தாளி அறுகின் தாராய் போற்றி 
நீள் ஒளி ஆகிய நிருத்தா போற்றி 
சந்தனச் சாந்தின் சுந்தர போற்றி 
சிந்தனைக்கு அரிய சிவமே போற்றி 
மந்திர மாமலை மேயாய் போற்றி 
எந்தமை உய்யக் கொள்வாய் போற்றி 
புலிமுலை புல் வாய்க்கு அருளினை போற்றி 
அலைகடல் மீ மிசை நடந்தாய் போற்றி 
கரும் குருவிக்கு அன்று அருளினை போற்றி 
இரும் புலன் புலர இசைந்தனை போற்றி 


படி உறப் பயின்ற பாவக போற்றி 
அடியொடு நடு ஈறு ஆனாய் போற்றி 
நரகொடு சுவர்க்க நானிலம் புகாமல் 
பரகதி பாண்டியற்கு அருளினை போற்றி 
ஒழிவற நிறைந்த ஒருவ போற்றி 
செழு மலர்ச் சிவபுரத்து அரசே போற்றி 
கழு நீர் மாலைக் கடவுள் போற்றி 
தொழுவார் மையல் துணிப்பாய் போற்றி 
பிழைப்பு வாய்ப்பு ஒன்று அறியா நாயேன் 
குழைத்த சொல்மாலை கொண்டருள் போற்றி 


புரம்பல் எரித்த புராண போற்றி 
பரம் பரம் சோதிப் பரனே போற்றி 
போற்றி போற்றி புயங்கப் பெருமான் 
போற்றி போற்றி புராண காரண 
போற்றி போற்றி சய சய போற்றி


திருச்சிற்றம்பலம்
மாணிக்கவாசக சுவாமிகள் திருவடிகளுக்கு வந்தனம்....

வியாழன், 22 செப்டம்பர், 2011

மரணாவஸ்தையிலும் அம்பிகையின் நினைவு அகலாதிருக்க...


எந்த நிலையிலும்...அருள்வடிவாய் விளங்கும் அபிராமியின் நினைவு...சிந்தையிலிருந்து சிதறாமலிருக்க... பாடுவோம் இப்பாடலை...


பாடல்
இழைக்கும் வினை வழியே அடும் காலன் எனை நடுங்க
அழைக்கும் பொழுது வந்து அஞ்சல் என்பாய் அத்தர் சித்தம் எல்லாம்
குழைக்கும் களபக் குவிமுலை யாமளைக் கோமளமே
உழைக்கும் போது உன்னையே அன்னையே என்பன் ஓடி வந்தே


பொருள்
என்னால் செய்யப்பட்ட கர்ம காரியங்களால் ஏற்பட்ட வினைக்கேற்ப, என் வினைக்கேற்ற விலை கொடுக்க, நான் நடு நடுங்க எமன் என்னை அழைத்துச் செல்லும் போது...நான் காலனின் பாசத்தில் சிக்கி மரணவேதனையில் அவஸ்தைப் படும் அக்கணத்திலும் உன்னை மட்டுமே அன்னையென்று அழைப்பேன்...அப்போது ... அத்தனும், சித்தனும், பித்தனுமான பிறைசூடிய சந்திர மௌலீஸ்வரனாம் சிவனின் சித்தத்தைக் குழைக்கக் கூடிய சந்தன மணம் வீசும் குவிந்த தனங்களையுடய கோமளவல்லித் தாயே..நீ என் முன் விரைவாக ஓடி வந்து...பயப்பட வேண்டாம் என்று எமக்கு ஆறுதல் அளித்துக் காப்பாய்....




நாகமணிந்தானின் திருவடியை மோகம் கொள்ளும் - ஜெ. சூரியா


செவ்வாய், 20 செப்டம்பர், 2011

அகால மரணமும், துர் மரணமும் உண்டாதிருக்க....


அகால மரணம் அண்டாமலிருக்க....பாராயணம் செய்வோம்...


பாடல்
ஆசைக்கடலில் அகப்பட்டு அருளற்ற அந்தகன் கைப்
பாசத்தில் அல்லற்பட இருந்தேனை நின் பாதம் என்னும்
வாசக் கமலம் தலை மேல் வலிய வைத்து ஆண்டு கொண்ட
நேசத்தை என் சொல்லுவேன் ஈசர் பாகத்து நேரிழையே




பொருள்
ஆசையெனும் இந்த மாயக்கடலில் அகப்பட்டு, பிறவிப் பெருங்கடல் நீந்த இயலாமல், தன் கடனில் சிறிதும் வழுவா, இரக்கமற்ற எமனேஸ்வரனின் பாசக்கயிற்றால் பிணைக்கப்பட்டு எல்லையிலா துன்பங்களுக்கு ஆளாக இருந்தேன்....அப்படிப்பட்ட என்னை, உமது மணம் கமழும் பொற்றாமரை போன்ற திருவடியை, தானாக...நீயே வலிய வந்து எம் சிரசில் பதித்து எம்மை ஆண்டு கொண்டாய்....இப்படிப்பட்ட உம் தாயன்பினை என்ன சொல்லி புகழுவேன்?....ஈசனின் இடப்பாகமலங்கரிக்கும் பேரழகே வடிவானவளே!


அரவு சூடிய அண்ணலை தன் சிரவு சூடிய - ஜெ. சூரியா 

மறுமையில் இன்பம் உண்டாக...


பிறவிப் பிணியறுத்து...மறுமையில் இன்பம் உண்டாக....பாடுவோம் இப்பாடலை....


பாடல்
உமையும் உமையொரு பாகனும் ஏக உருவில் வந்து இங்கு
எமையும் தமக்கு அன்பு செய்ய வைத்தார் இனி எண்ணுதற்குச்
சமையங்களும் இல்லை ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை
அமையும் அமையுறு தோளியர் மேல் வைத்த ஆசையுமே


பொருள்
மலைமகன் மகளே!, பொடி பூசி அம்பலமாடும் கரியுரியானின் திருமேனியில் இடப்பாகத்தில் இடம் கொண்டவளே! மங்கையும், கங்கைகொண்ட மங்கைபங்கனும், அனைத்தும் அடங்கிய ஒரே உருவில் வந்து...கேடுகெட்ட ஈனப்பிறவியான என்னை தங்கள் திருவடி வருடி அன்பு செய்ய பணித்து அருள் மழை பொழிந்தீர்கள்..இனி நான் பின்பற்ற எந்த மதமும், நெறியும், மார்க்கமும், பாதையும், வழியும்..இல்லை..இனி எனக்கு பிறவிகள் கிடையாது....ஆகவே இனி என்னை ஈன்றெடுக்க ஒரு தாயும் கிடையாது....பெண், பொன் மீது வைத்த பந்தமும் நீங்கி, சலனமற்ற நீரோடையாய் மனம் உன் திருவடி நோக்கி பயணிக்கின்றது....


காட்டாடும் பிரானுக்கு கனகமணி சூட்டும் ஜெ. சூரியா

வெள்ளி, 16 செப்டம்பர், 2011

அடுத்தடுத்து வரும் ஆபத்துக்கள் நீங்க...


தொடர்ந்து வரும் தொல்லைகள் அகல, அடுத்தடுத்து வரும் ஆபத்துக்கள் நீங்க...இப்பாடலைப் பாராயணம் செய்யுங்கள்..


பாடல்
அன்றே தடுத்து என்னை ஆண்டு கொண்டாய் கொண்டதல்ல என்கை
நன்றே உனக்கு இனி நான் என் செயினும் நடுக்கடலுள்
சென்றே விழினும் கரையேற்றுகை நின் திருவுளமோ
ஒன்றே பல உருவே அருவே என் உமையவளே 


பொருள்
என்றுன்னை மனதில் வைத்தேனோ அன்றே என்னை நீ ஆட்கொண்டாய்..உம் அருளால் எம்மை மீளா அடிமை கொண்டாய்....ஆட்கொண்டு, அடிமை கொண்ட பின் நான் உன் உடமையாகிவிட்டேன்......உம் உடமையை உதறுவது உலகம் உய்யும் உமைக்கு உகந்ததாகுமா?  இனிமேல் நான் என்ன செய்தாலும், மதிகெட்டு, நடுகடலில் போய் விழுந்தாலும்...அதையெல்லாம் பொறுத்துக் காத்து சேயாகிய எம்மை (பிறவிக்) கரையேற்ற வேண்டியது தாயாகிய உம் திருவுளமாகும்....ஒன்றானவளே!...பலவுருவானவளே!...உருவமும் அருவமும் ஆனவளே!...எம் உமையே...உம்மை போற்றுகின்றேன்...


ஈசனடி நேசன் - ஜெ. சூரியா

வியாழன், 15 செப்டம்பர், 2011

அணிமாதி அஷ்ட சித்திகள் பெற....


வையம் வசப்பட...அஷ்ட சித்திகள் பெற......அம்மை அருளிட...இப்பாடலை பாராயணம் செய்யுங்கள்...


பாடல்
சித்தியும் சித்தி தரும் தெய்வம் ஆகித் திகழும் பரா
சக்தியும் சக்தி தழைக்கும் சிவமும் தவம் முயல்வார்
முத்தியும் முத்திக்கு வித்தும் வித்தாகி முளைத்து எழுந்த
புத்தியும் புத்தியினுள்ளே புரக்கும் புரத்தை அன்றே




பொருள்
அட்டமாசித்திகள் எனும் 1. அணிமா (உடலைப் பஞசினும் ஒய்யதாக மாற்றி பிறர் கண்களுக்குத் தோன்றாது மறைத்தல்), 2. மகிமா (உடலை புதாகாரமாகத் தோன்றச் செய்தல்) 3. கரிமா (உடலை யானையைப் போன்று கனமாக்குதல்) 4. லகுமா (உடலை தக்கையைப் போல் இலேசாக்குதல்) 5. பிராப்தி (தமது ஆற்றலால் வெயில் மழை முதலிய கால நிலைகளை மாறச் செய்தல்)6. பிரகாமியம் (கூடுவிட்டுக் கூடுபாய்தல் நினைத்தவர் முன்னால் உடனே தோன்றுதல்) 7. ஈசத்துவம் (ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தொழில்களைச் செய்தல்) 8. வசித்துவம் (தெய்வங்களைத் தன் வயப்படுத்துதல்) எனும் எட்டு வகையான அபூர்வ சக்தியானவளே!  சக்தியாய் ஆனது மட்டுமல்லாமல் நின்னடி போற்றும் அடியார்க்கு, அந்த அஷ்ட சித்திகள் கைக்கூட காரணமாயிருக்கும்..சக்திகளில் தலைசிறந்த சக்தியாய்...பராசக்தியாய் விளங்குபவளே! முதல் மூவரையும் பெற்றவளே! உன்னில் உருவான சிவம் மூலம் உன்னை எண்ணித் தவமியற்றுபவர்க்கு பிறவா வரம் தந்து,  மோட்ச வீடுபேறடையும் எண்ணமும், அந்த எண்ணத்தை செயலாக்கும் வண்ணம் எம் சிந்தையில் அமர்ந்து நல்வழி காட்டி,  எம் எண்ணங்களை சுத்தி செய்து எம்மை என்றும் இமைபோல் காக்கும் உமையவளே!... 


நிலையாமை பேசி நிலைத்து நின்ற பட்டினத்தான் பாதம் பற்றும் -ஜெ. சூரியா

செவ்வாய், 13 செப்டம்பர், 2011

இம்மை மறுமை இன்பங்கள் அடைய


இவ்வுலகவாழ்விலும்....மேலுலக வாழ்விலும் எல்லா நன்மைகளும் பெற ...இதோ ஒரு பாடல்.....


பாடல்
சொல்லும் பொருளும் என நடமாடும் துணைவருடன் 
புல்லும் பரிமளப் பூங்கொடியே நின் புதுமலர்த்தாள்
அல்லும் பகலும் தொழும் அவர்க்கே அழியா அரசும்
செல்லும் தவநெறியும் சிவலோகமும் சித்திக்குமே.

பொருள்
மெய்யில் உயிர் கலந்தது போல ..நள்ளிரவில்ஆனந்தத் தாண்டவம் பயின்றாடும் விரிசடையானுடன்....சொல் பொருளுமாய்..சொல்லே பொருளுமாய்....சொல்லும் பொருளுமாய்...சொல்லா பொருளுமாய்...அர்த்தமாகி அனர்த்தமாகி, ஆனந்தமாகி, அர்த்தநாரியுமாகி நிற்கும் சுகந்த மணம் வீசும் அழகிய பச்சைநிறக் கொடி போன்றவளே! .அனுதினமும், இரவும் பகலும், இன்று பூத்த வாச மலராய் பாசம் காட்டும் நின் தாளிணை சிரம் கொண்டு வணங்கும் அடியார்களுக்கு இம்மையில் அழிவிலா அரச சுகங்களும், பின் நின் திருவடிகளை தேடி மோட்ச வீடு பெறும் திண்ணமாகிய தவ வாழ்வும், திருவடி சேவையினால் மறுமையில் அமரருக்கெல்லாம் அமரராகும் நித்திய சிவலோக வாழ்க்கையும் கைகூடும்.....

காமதகனம் செய்தவனை தன் கோபதகனம் செய்ய தவமியற்றும்- ஜெ. சூரியா

வெள்ளி, 26 ஆகஸ்ட், 2011

மன நோய் தீர..


எல்லோரும் மனதார சொல்லுங்கள்.. மனநோய் தீர...


பாடல்
உடைத்தனை வஞ்சப்பிறவியை உள்ளம் உருகும் அன்பு
படைத்தனை பத்ம பதயுகம் சூடும் பணி எனக்கே
அடைத்தனை நெஞ்சத்து அழுக்கை எல்லாம் நின் அருட்புனலால்
துடைத்தனை சுந்தரி நின் அருள் ஏதென்று சொல்லுவதே


பொருள்
என்னை ஏமாற்றி வஞ்சம் செய்து...மீண்டும் இப்பிறவிச் சூழலில் சிக்கவைக்கமுயலும் காமம், குரோதம், ஆணவம் என்னும் மும்மலங்களையும் உடைத்து எம் பிறவிப் பிணி தீர்ப்பவளே! உன்னையும் உன் பாத தரிசனத்தையும், இக்கடையேன் மேல் கடைக்கண் காட்டிய கடையூர்க்காரியான உன் அன்பை எண்ணி எண்ணி உருகும் வண்ணம் என்னை ஆளாக்கியவளே! தாமரை மலர் போன்று சிவந்த நின் பாதங்களை சிரம்மேல் சூடும் பணியை...அந்த பாக்கியத்தை எமக்கு மட்டுமே உவந்தளித்த எம் தாயே!  கபடம் நிறைந்த வேடதாரியான எனது உள்ளத்து ஊறும் கெட்ட எண்ணங்களை உனது அருள் மழையால் கழுவி துடைத்து...இப்பிறவியை சுத்தமாக்குபவளே! இவ்வளவும் எமக்காக செய்யும் பேரழகியான உம் அருளை என்னவென்று சொல்வேன் என் அம்மையே!




நந்திவாகனனை புந்தியில் வைத்தடி போற்றும் - ஜெ. சூரியா

வியாழன், 25 ஆகஸ்ட், 2011

சொல்வன்மையும், செல்வாக்கும் பெற..


சொல்வாக்கு நல்வாக்கானால்..செல்வாக்கு தானேவரும்...இருவாக்கும் கைகூட..பட்டரின் திருவாக்கை பாராயணம் செய்வோம்..


பாடல்
ஏத்தும் அடியவர் ஈரேழ் உலகினையும் படைத்தும்
காத்தும் அழித்தும் திரிபவராம் கமழ் பூங்கடம்பு
சாத்தும் குழல் அணங்கே மணம் நாறும் நின் தாளிணைக்கு என்
நாத்தங்கு புன்மொழி ஏறியவாறு நகையுடைத்தே


பொருள் 
திரிபுர சுந்தரியே! உனக்குத் தெரியுமா...யாரெல்லாம் உன்னைப் போற்றித் துதிக்கின்றனர் என்று?.... படைத்தல் தொழிலின் அதிபதியாம் நான்முகப்பிரம்மாவும், காத்தல் தொழிலின் அதிபதியாம்...மண்ணுண்டு...விண்ணளந்த எம்பெருமான் செங்கண் மாலும், அழித்தல் தொழிலின் அதிபதியாம் கூடல் நகரின் ஆடல் நாயகன் சிவபெருமானும் உன்னை என்நாளும் போற்றித் துதிக்கின்றனர்...சுகந்த மணம் வீசும் கடம்ப மாலையை அணிந்து மகிழும் கடம்பவனக் குயிலாம், எனையாளும் மதுரையின் அரசி மீனாட்சித் தாயே ! மூவரும் தேவரும் போற்றும் நின்மலர்போன்ற பாதங்களை கடையேனின் நாவிற் உதித்த சொற்களும் போற்றி அலங்கரிப்பது....மிகவும் நகைச்சுவை ததும்பும் வியப்புக்குரிய ஒன்றாகும்....

நால்வேதம் ஆனானை....நான்முகன் நாரணன் காணானை...வாதவூரான் வாசகத்தால் வசியப்படுத்தும்..ஜெ. சூரியா....

புதன், 24 ஆகஸ்ட், 2011

நினைத்த காரியம் இடையூறின்றி நிறைவேற....


எண்ணியது திண்ணம் பெற...இடையூறுகள்...இடையிலேயே அகல...பாராயணம் செய்யுங்கள் இப்பாடலை...


பாடல் 
பின்னே திரிந்து உன் அடியாரைப் பேணி பிறப்பு அறுக்க
முன்னே தவங்கள் முயன்று கொண்டேன் முதல் மூவருக்கும்
அன்னே உலகுக்கு அபிராமி என்னும் அருமருந்தே
என்னே இனி உன்னை யான் மறவாமல் நின்று ஏத்துவனே


பொருள்
உன்னடியாரின் பின் சென்று, உளமார அவர்களின் அடி தொழுது, பணிவிடைகள் செய்வதின் மூலம் எனது பிறவிப் பிணி தீர்க்கும் உபாயத்தை அறிந்து அதை பலகாலம் விடாமல் கர்ம சிரத்தையுடன் செய்கின்ற பாக்கியத்தை நான் இதுநாள் வரை செய்த தவப்பலங்களால் அடைந்தேன்...ஆக்கும் நான்முகன்...காக்கும் நாராயணன்...சம்ஹரிக்கும் சங்கரன் ஆகிய முத்தொழில் புரியும்...தேவர்களில் முதலான மும்மூர்த்திகளை பெற்றெடுத்த அன்னையே! இந்த பூவுலக துன்பங்களையெல்லாம் துடைத்தெறியும் அரிய மருந்தாக விளங்குபவளே! உம் சிறப்புக்கள் என்னென்ன உள்ளதோ அத்தனையும் மறவாமல் நினைந்து, உம்மை அணுப்பொழுதும் வணங்கிக் கொண்டிருப்பதே என் கடமையாகும்... 


காளைகட்டியானின் ...காலை கட்டிய..ஜெ. சூரியா

செவ்வாய், 23 ஆகஸ்ட், 2011

தீரா வியாதிகள் தீர...


இருப்பதிலே தீராவியாதி இந்தப் பிறவிதான்...இந்த தீரா வியாதியை தீர்க்க....தினந்தோறும் சொல்லுவோம் இப்பாடலை...


பாடல்
மணியே மணியின் ஒளியே ஒளிரும் மணி புனைந்த
அணியே அணியும் அணிக்கழகே அணுகாதவர்க்குப்
பிணியே பிணிக்கு மருந்தே அமரர் பெருவிருந்தே
பணியேன் ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்த பின்னே


பொருள்
ஒளிநின்ற கோளங்கள் ஒன்பதிலும் உறையும்....நவ இரத்தினமே!...அந்த நவ இரத்தின மணியின் உள்ளுறைந்த என்றுமே மங்காத ஒளியே!.. ஒளிவீசும் அம்மணிகளை அணிகலங்களாக அணிந்த அணிகலனே! உன்னால் அணியப் படும்...அந்த அணிகலன்களுக்கு அழகை வழங்கி..அணிக்கு அணியாக திகழும் அகிலாண்ட நாயகியே!  நின்னைச் சரணடையாதோர்க்கு பிறவிப் பிணியானவளே! நின் திருப்பாதம் தொழுதேத்துவோரின் பிறவிப் பிணி தீர்த்து பிறவாநிலையளிக்கும் அருமருந்தானவளே! பிறவாநிலைகொண்ட தேவரும், மூவரும் போற்றித் துதித்து மகிழும் விருந்தே! அமுதே!.. உன் பாதக் கமலத்தை கரம் கூப்பி, என் சிரம் சூடிய பின், வேறு எவரையும் நான் ஏறெடுத்தும் பார்க்கேன்...




அருவமும்...உருவமும் ஆனானை கருமமே கண்ணாய் துதிக்கும்- ஜெ. சூரியா

திங்கள், 22 ஆகஸ்ட், 2011

மன சஞ்சலம் உண்டாதிருக்க...


சஞ்சலங்களை அஞ்சாமல் சந்திக்க இப்பாடல் பாடுவோம்...


பாடல்
கொள்ளேன் மனத்தில் நின் கோலம் அல்லாது அன்பர் கூட்டம் தன்னை
விள்ளேன் பரசமயம் விரும்பேன் வியன் மூவுலகுக்கு
உள்ளே அனைத்தினுக்கும் புறம்பே உள்ளத்தே விளைந்த
கள்ளே களிக்கும் களியே அளிய என் கண்மணியே




பொருள் :
அழகுக்கு அழகுசேர்க்கும் பேரழகியான உன் திருவுருவம் மட்டுமே என் உள்ளமெங்கும் நிறைந்துள்ளது. வேறு எந்த உலக நிகழ்வும் என் மனதில் நான் கொள்வில்லை...உனது அடி தொழும் அடியார் கூட்டத்தை மட்டுமே விரும்பி நாடுவேன்...பிறவாநிலையளிக்கும் உன் சமயத்தை தவிர வேறு எந்த சமயத்தையும் விரும்ப மாட்டேன்....மூவுலகும் நீயாகி....மூவுலக்குள்ளும் நீயாகி...பிரபஞ்சத்தின் அகமும்...புறமுமாய்..அண்ட வெளியாய் நின்று இயக்குபவளே! என் உள்ளத்தில் கள்ளைப் போன்று மயக்கமும் அமுதம் போன்று இனிமையும் சேர்த்து என்னை மீளா அடிமை கொண்டவளே! எல்லாவித இன்பமுமாய் ஆகி..எம்மை அனுபவிக்க வைக்கும் இன்பமயமானவளே! ஆனந்த சொரூபியே! கடையேன் மேல் கருணை பூத்த என் கண்ணின் மணி போன்றவளே!...


சொக்கநாதனை சிந்தையில் சிக்க வைத்த-ஜெ. சூரியா

வெள்ளி, 19 ஆகஸ்ட், 2011

பிறவிப் பிணி தீர...


அல்லல் அறுபட..தொல்லை விடுபட....பிறவிப் பிணிதீர...சொல்லுங்கள் இப் பாடலை...


பாடல்
கொடியே இளவஞ்சிக் கொம்பே எனக்கு வம்பே பழுத்த
படியே மறையின் பரிமளமே பனி மால் இமயப்
பிடியே பிரமன் முதலாய தேவரைப் பெற்ற அம்மே
அடியேன் இறந்து இங்கு இனிப் பிறவாமல் வந்து ஆண்டு கொள்ளே.


பொருள்


பாசமுள்ள பக்தர்களைத் தேடி படரும் கொடிபோன்றவளே! வஞ்சியின் இளமையான கொம்பைப் போன்று மென்மையானவளே!
வேதங்களின் சுகந்த மணமாயிருக்கும் சாரமே!  பனியுருகும் மென்மையான இமயத்தில் உதித்த சர்வ பலம் பொருந்திய பெண் யானையைப் போன்றவளே! தேவரையும், சதுர்முகன், சக்ரதாரன், சதாசிவன் எனும் மூவரையும் பெற்ற அன்னையாய் இவ்வுலகை உய்விக்கும் ஆதிபராசக்தி தாயே! உன்னடியே கதியெனும் இந்த கடையேன் இறந்தபின் பிறவிச்சூழலில் சிக்காமலிருக்க, சிவனிடம் இடம் பெற்ற நீ உன் காலடியில் எனக்கு ஓரிடம் தந்து ஆட்கொள்ளல் வேண்டும்....



தாயிற் சிறந்த தயாஆன தத்துவனைத் துதிக்கும் நாயிற்
கடையான் -  - ஜெ. சூரியா...

வியாழன், 18 ஆகஸ்ட், 2011

அம்பிகைக்குச் செய்த அபசார தோஷம் நீங்க...



தெரிந்தோ..தெரியாமலோ அம்பிகைக்கு செய்த அபசார தோஷங்கள் நீங்க....இப்பாடலை பாராயணம் செய்வோம்...




பாடல்
மங்கலை செங்கலசம் முலையாள் மலையாள் வருணச்
சங்கலை செங்கைச் சகலகலாமயில் தாவு கங்கை
பொங்கலை தங்கும் புரிசடையோன் புடையாள் உடையாள்
பிங்கலை நீலி செய்யாள் வெளியாள் பசும் பெண்கொடியே


பொருள்
என்றும் மங்கலமாய் இருக்கும் சுமங்கலித்தாயே! சிவந்த கலசம் போன்ற தனங்களை தன்னிடத்தே கொண்டவளே! மலையரசனாம் இமவான் மகளாம் பர்வத வர்தினியே! கடல் பூக்கும் சங்கை, தம்கை வளையல்களாக்கி அணிந்ததன் மூலம் அவற்றிற்கு அழகு சேர்ப்பவளே! ஆய கலைகளும் அறிந்த மலைமகளே! பொங்கிப் பெருகி, அலைகளாய் தங்கும் கங்கையைத் தன் சிரம் கொண்டானின் இடம் கொண்டாளே! எல்லாவற்றையும் உன்னிடத்தில் உடையாளே! தகதகக்கும் தங்க நிறத்தவளே! கோலவிழியும் நீல நிறமும் கொண்டவளே! சிந்தூரமாய் சிவந்தவளே! அன்னம் போல் வெண்மை நிறம் கொண்டவளே! என் நெஞ்சமெங்கும் பாசமாய் படர்ந்திருக்கும் பச்சை வண்ணம் கொண்ட கொடியே!    நிறங்கள் ஓரைந்துடையான் நிறங்களையெல்லாம் நீ கொண்டு நின்ற தாயே! வணங்குகின்றேன்....


சர்வ குணங்களும் நீ....சர்வ நிறங்களும் நீ...


மால் தேடிய கால் தேடும் -ஜெ. சூரியா

புதன், 17 ஆகஸ்ட், 2011

வீடு, வாசல் முதலிய செல்வங்கள் உண்டாக...


இப்பாடலை படித்தால்...இம்மையில் பொருட் செல்வமும், சொந்த வீடும், ...மறுமையில் அருட் செல்வமும், மோட்ச வீடும், சுவர்க்க வாசலும் நமக்கமையும்


பாடல்
உறைகின்ற நின் திருக்கோயில் நின் கேள்வர் ஒரு பக்கமோ
அறைகின்ற நான்மறையில் அடியோ முடியோ அமுதம்
நிறைகின்ற வெண்திங்களோ கஞ்சமோ எந்தன் நெஞ்சகமோ
மறைகின்ற வாரிதியோ பூரணாசல மங்கலையே


பொருள்


எம்மை உன் பாசத்தினால் தைத்த தையல் நாயகியே! நீ எங்கு உறைகின்றாய்?...எது உன் ஆலயம்? நஞ்சே அமுதாய் நயந்த ஆதியந்தமில்லாதானின் பாதியா...விடமுண்டவனின் இடம் இப்போது உன் இடம்....சரிதானே... வேதநாயகியே, வேதப் பரம்பொருளாய்..மறைகளை உன்னுள் மறைத்த நீ அம்மறைகளின் ஆதியாய் இருக்கின்றாயா இல்லை அந்தமாய் இருகின்றாயா?
(இது புரியாமல் அல்லது புரிந்ததால் தான் பட்டர் அந்தாதி பாடுகின்றாரோ?) வெண்பனி மதியிலா....தாமரை மலரிலா....என் மனதிலா
அல்லது பரமன் பள்ளி கொள்ளும்...இலக்குமி வாசம் செய்யும் பாற்கடலா? தாயே! நீ எங்கும் நீக்கமற நிறைந்து, பரிபூரண மங்கலமே வடிவானவளாய் இருக்கின்றாய்....

வைத்தியநாதனை பைத்தியமாய் பற்றும் -ஜெ. சூரியா

பேரின்பம் பெற...


இதைப் பாராயாணம் செய்வதே பேரின்பம்....




பாடல்
வெளிநின்ற நின் திருமேனியைப் பார்த்து விழியும் நெஞ்சும்
களிநின்ற வெள்ளம் கரைகண்டதில்லை கருத்தினுள்ளே
தெளிநின்ற ஞானம் திகழ்கின்றது என்ன திருவுளமோ?
ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே


பொருள்


நான் விரும்பி வேண்டிக் கேட்டவுடன், அண்ட சராசரங்கள் எல்லாம் நீக்கமற நிறைந்த நீ...அரவோடு உறவாடும் என்னப்பனோடு திருமணக் கோலத்தில் திருவருள் புரிய காட்சி கொடுத்தாய்.  வான்வெளியில் மீன்விழி கொண்டு, நீ நின்ற கோலம் கண்டு என் இதயமும், கண்களும் கரையிலா...கரைபோட இயலா காட்டாற்று வெள்ளமென இன்பம் அடைந்தன. எல்லையிலா இன்பமடையும் போது சித்தம் தடுமாறுமென்பது நியதி. ஆனால் உன்னக் கண்டதும் என் சித்தத்தில்  தெளிந்த ஞானம் கைவரப்பெற்றது கண்டேன். இவ்வாறு நிகழக் காரணம் உனது திருவுளமின்றி வேறெதுவுமுண்டோ? நவராத்திரி நீ...நவசக்தி நீ....எமக்கு நல்லது செய்ய நாகப்படம் சூடிய நவகோள் நாயகியும் நீ ! 


ஏனோ தெரியவில்லை..இதை எழுதும் போது எனக்குள் ஒரு சிலிர்ப்பு....


ஆட்கொள்ள நீ...அடிபேண நான்...




தாண்டவமாடும் ஆண்டவனின் அடிதேடி ஓடும் - ஜெ.சூரியா.

திங்கள், 15 ஆகஸ்ட், 2011

மரணபயம் நீங்க...


மரணம் என்றால் யாருக்குத்தான் பயமிருக்காது....மரணபயம் இல்லாமல் இருப்பதே மரணத்தை வெல்லும் வழியாகும். மரண பயம் நீங்க பாராயணம் செய்வோம் இப்பாடலை....




பாடல்
வவ்விய பாகத்து இறைவரும் நீயும் மகிழ்ந்திருக்கும்
செவ்வியும் உங்கள் திருமணக்கோலமும் சிந்தையுள்ளே
அவ்வியம் தீர்த்து என்னை ஆண்ட பொற்பாதமும் ஆகி வந்து
வெவ்விய காலன் என் மேல் வரும் போது வெளி நிற்கவே.




பொருள்:


உம்மால் கவரப்பட்டு, நீ கவர்ந்த இடப்பாகம் கொண்டு, அர்த்தநாரியாய் அருள் மாரி வழங்கி அம்பலத்தாடும் மாதொருபாகனாகிய எம் இறை ஈசனும், பாகம்பிரியாளாய், மட்டுவார் குழலியாய் நீயும்,  மகிழ்ந்திருக்கும் செம்மையுடன் கூடிய உங்கள் திருமணக் காட்சியானது என் சிந்தனையுள் உள்ள அத்தனை அசுத்தங்களையும் தீர்க்கின்றது. என் மெய், வாக்கு, காயத்தை சுத்தப்படுத்தி, மன மாச்சர்யங்களைத் தீர்த்து என்னைத் தீரா அடிமை பூண்டது நின் பொற்பாதங்கள். சர்வேஸ்வரனால் ஈஸ்வரப்பட்டம் பெற்ற, காலத்தை வென்ற, காலகாலனாகிய எமனேஸ்வரன் என் மேல் பாசம் கொண்டு, தன் பாசக்கயிற்றை வீசும் போது, மண்ணுயிர் காக்கும் நின் பொற்பாதங்கள் என்னுயிர் காக்கவும் எழுந்தருள வேண்டும்.


பிறையணிந்த பெருமானை இதயச் சிறையணிந்த - ஜெ. சூரியா

செவ்வாய், 9 ஆகஸ்ட், 2011

கன்னிகைகளுக்கு நல்ல வரன் அமைய...


வீட்டில் கல்யாண வயதில் பெண்ணிருந்தால், நல்மணம் நிகழ நறுமணமிக்க இப்பாடலை பாராயணம் செய்யுங்கள்


பாடல்
அதிசயமான வடிவுடையாள், அரவிந்தமெல்லாம்
துதிசய ஆனன சுந்தரவல்லி, துணைஇரதி
பதிசயமானது அபசயம் ஆக முன் பார்த்தவர் தம்
மதிசயமாக அன்றோ வாமபாகத்தை வவ்வியதே.


பொருள்: 
அதிசயங்களுக்கெல்லாம் அதிசயமானவள் அதிசயமான வடிவழகுடன் இருப்பது அதிசயமில்லையாயினும் அது அபிராமி பட்டருக்கு அதிசயமாக இருக்கின்றது. அல்லி, தாமரை மற்றும் அழகென்று சொல்லும் அத்தனை மலர்களின் அழகையும் தன் அழகால் வென்று அவைகளால் என்றும் துதிக்கப்படும் வல்லமை பொருந்திய பேரழகியே! ரதிமணாளனாம் மன்மதனை வென்றோர் யாருளரோ எனும் போது தன் நெற்றிக் கண்ணால் மன்மதனை எரித்து காமதகனம் புரிந்த அடல்விடையேறும் எம்பெருமானை, உன் கடைக்கண்ணால் கண்டு, மதி மயங்கச்செய்து , அவர்தம் இடப்பாகம் கவர்ந்து பாகம் பிரியாளாய் நின்றவளே! காமம் கொன்றானை மோகம் கொள்ள வைத்ததனால்..நீ ...அதிசயங்களுக்கெல்லாம் அதிசயமான வடிவழகுடையவள்.


தேவார நாயகனை தன் நாவாரப் போற்றும் - ஜெ. சூரியா

திங்கள், 8 ஆகஸ்ட், 2011

முக்காலமும் உணரும் ஆற்றல் உண்டாக...


எக்காலமும் நற்காலமாக முக்காலமும் உணர வேண்டும்....முக்காலமும் உணர இப்பாடலை ஒரு காலமாவது ஓதுவோம்.


பாடல்
கிளியே கிளைஞர் மனத்தே கிடந்து கிளர்ந்து ஒளிரும்
ஒளியே ஒளிரும் ஒளிக்கு இடமே எண்ணில் ஒன்றும் இல்லா
வெளியே வெளி முதல் பூதங்கள் ஆகி விரிந்த அம்மே
அளியேன் அறிவு அளவிற்கு அளவானது அதிசயமே


பொருள்:
பச்சைவண்ணத் திருமேனி கொண்டு, சொல்வதை சொல்லும் கிளியாக அல்லாமல் சொல்வதை செய்யும் கிளியாக மதுரையம்பதியில் நின்றவளே! உன்னையே கதியென்றிருக்கும் நின் அடியார்களின் மனதில் என்றும் அணையா தீபச் சுடராக சுடர்விடும் பேரொளியே! அப்பேரொளியின் உள்நிறைந்து ஒளிக்கும் ஆன்ம ஒளியானவளே! நினைத்துப் பார்க்கையில் அண்ட பேரண்டமாய் பரந்த சூன்ய வெளியானவளே! பஞ்சபூதங்களாம் விண்ணாய், மண்ணாய், வளியாய், ஒளியாய் (தீ), நீராய் நின்ற என் வராகித் தாயே! இந்த சிறியோனின் சிற்றறிவிற்கும் எட்டும் அளவிற்கு நின்ற உன் கருணை ஒரு பேரதிசயமே!




பெரிய கோவில் கொண்டானை தன் சிறிய நாவில் கொண்டாடும் - ஜெ. சூரியா

சனி, 6 ஆகஸ்ட், 2011

பெருஞ்செல்வமும் பேரின்பமும் பெற....


யாருக்குத்தான் ஆசையில்லை? பெருஞ்செல்வமும் பேரின்பமும் பெற அனுதினமும் அன்னயை இந்தப் பாடலால் ஆராதியுங்கள்...




பாடல்
தண்ணளிக்கு என்று முன்னே பல கோடி தவங்கள் செய்வார்
மண்ணளிக்கும் செல்வமோ பெறுவார் மதி வானவர் தம்
விண்ணளிக்கும் செல்வமும் அழியா முக்தி வீடும் அன்றோ
பண்ணளிக்கும் சொல் பரிமள யாமளைப் பைங்கிளியே


பொருள்
தாயே! நீ ஜோதிவடிவாய்,தீமைகளை அழிக்கும் ஆங்காரமாய், உக்ர காளியாய், வக்ர காளியாய், ருத்ர சொருபியாய் நின்றாலும், உம் சேயாம் இந்த மண்ணுலக மாந்தர்களுக்கு உனது அருள் என்றுமே மிகவும் குளிர்ச்சியானது. அந்த குளிர்ந்த அருளைப் பெற பல கோடி விதமான பக்திகள் செய்து தவங்கள் இயற்றுகின்றனர்.  அந்த பக்திக்கான நோக்கம் விண்ணுலகம் வாழ்ந்து என்றும் அழியா ஆனந்தம் நல்கும் முக்தி எனும் வீடு பேறு பெறுதலே ஆகும். ஆனால் நீயோ மறுமையில் முக்தியும் வீடுபேறும் மட்டுமின்றி, இம்மையிலும் இம்மண்ணுலக செல்வங்களையும் மழை போல், தக்க சமயத்திற்கு வாரி வழங்கி சமயபுரம் மாரியாய் வீற்றிருக்கின்றாய். அருளும் பொருளும் அளிக்கும் அரும்பொருளே! சொல்லும் சொல்லெல்லாம் நன்மணம் வீசும் இசையாய் யாழைப்பழித்த மொழியாளே! பச்சைக்கிளியை கையிலேந்திய பசுங்கிளியே!  மரகதப்பச்சை மேனிகொண்டு, மகரக் கொடியும் கொண்டு மதுரையையும் ஆளும் மீனாட்சியே! ஈசனாரின் தோழியே!


முக்கண்ணனை எக்கணமும் வரிக்கும் - ஜெ. சூரியா

புதன், 3 ஆகஸ்ட், 2011

தலைமை பெற...


எல்லோருக்கும் தலைமைப் பொறுப்பேற்க ஆசை இருக்கும். அந்த நினைவை நிஜமாக்க பாடுங்கள் இந்த பாடலை.....


பாடல்
வந்திப்பவர் உன்னை வானவர் தானவர் ஆனவர்கள்
சிந்திப்பவர் நல்திசைமுகர் நாரணர் சிந்தையுள்ளே
பந்திப்பவர் அழியாப் பரமானந்தர் பாரில் உன்னைச் 
சந்திப்பவர்க்கு எளிதாம் எம்பிராட்டி நின் தண்ணளியே.


பொருள்
விண்ணுலகம் வாழும் தேவர்களும், அசுரர்களும் என்றும் உன்னை வணங்கியபடியே இருக்கின்றனர். கமலத்திலமர்ந்த வேதப்பரம்பொருள் நான்முகனும், அவதார நாயகன் நாராயணனும் என்றும் உன்னை சிந்தித்தபடியே இருக்கின்றனர்.  அழியாத ஆனந்தமளிக்கும் பரம்பொருள் சர்வேஸ்வரன் தனது தூய அன்பால் என்றும் உன்னைக் கட்டி போட்டபடி இருக்கின்றார். ஆனாலும் இவர்களைக் காட்டிலும் இந்த பூவுலகில் உம் திருவடி பணிவோர்க்கு மட்டும் என்றும் உன் கருணையும் அருளும் எளிதாகக் கிடைக்கின்றது. எம் தலைவியே இது மிகவும் வியப்பிற்குரிய ஒன்றாகும்.




ஆலகாலம் உண்டானைக் காலம் காலமாய் கொண்டாடும் - ஜெ. சூரியா

செவ்வாய், 2 ஆகஸ்ட், 2011

ஆடிப் பூரத்தில் அப்படியென்ன இருக்கின்றது?

இன்று ஆடி புரம். என் மனைவி நேற்று மாலையிலிருந்தே, ஏங்க, நாளைக்கு ஆடிப்பூரம், நான் வளையல் வாங்கி கிரைம் பிராஞ் ஸ்டாப்பிங்கில் (மதுரை)  உள்ள அம்மன் கோவில் பூஜையில் கொடுக்க வேண்டும் என்று கூறிக் கொண்டிருந்தாள். ஆடிப்பூரம் ஆண்டாள் அவதார தினம் என்பது எனக்குத் தெரியும். அம்மனுக்கு வளையல் சாற்றி பூசை செய்வது பற்றி எனக்கு தெரியாது. ஆனால் என் மனைவி வருடத்திற்கொருமுறை மட்டுமே அந்த கோவிலுக்குச் செல்வாள். பூசையும் மிக திவ்யமாக இருக்கும். சரி வலையில் தேடுவோம் என்று கூகிள் தேடல் போட்டவுடன் எனக்கு பல தகவல்கள் தெரிய வந்தது. அதை அப்படியே சுட்டு, சூடு ஆறாமல் தருகிறேன். உண்மையாக அதை எழுதியவர்கள் என்னை மன்னிக்கவும். இந்த விஷயம் நாலுபேருக்குத் தெரிந்தால் நல்லது என எண்ணி சுட்டு விட்டேன்.... இதோ நான்...நானே சுட்டது....


ஆடிப் பூரம் - அம்பிகை கருவுற்று இருப்பதை - முளைப்பயிற்றை அம்பிகையின் வயிற்றில் பிணைத்து, கருக்கோலம் கொண்டிருப்பதாக எண்ணி பிரார்த்தனை செய்வார்கள்.
முளைப்பயிறின் வடிவமும், நுண்ணோக்கியில் தெரியும் உயிரணுவின் வடிவமும் ஒன்று போலவே இருப்பதைக் காணுங்கள்.


ஆன்றோர்கள், இவற்றை அறிந்திருந்ததால், இப்படி ஒரு ஏற்பாட்டினைச் செய்திருபார்களோ?
நூற்றுக்கணக்கான முளைப் பயிற்றை ஒரு துணியில் கட்டி, அதை அம்பிகையின் வயிற்றில் பிணைப்பார்கள். முளைப் பயிறு கட்டுவது, வம்ச அபிவிருத்திக்காகவும், நற்குழந்தைப் பேற்றுக்காகவும் கட்டப்படுவது ஆகும்.
கர்ப்பமான பெண்களுக்கு வளைகாப்பு செய்வது வழக்கமல்லவா?
அம்பிகைக்கு வளையல்கள் சார்த்தியும் வழிபாடுகள் நடைபெறும்.அகிலாண்ட நாயகிக்கு வளையல்களாலேயே அலங்காரம் செய்து வழிபடும் நாள் ஆடி மாதத்தில், பூரம் நக்ஷத்திரம் இணையும் நாள் ஆகும்.
வளைகாப்பு நிகழ்ச்சி என்பது கர்ப்பமான பெண்ணுக்கு மகிழ்ச்சியூட்டும் விதமாக, உறவினர்கள் புடைசூழ வாழ்த்துவார்கள்.
கர்ப்ப காலத்தில் பெண்ணுக்கு எவ்வித (உடல் & மனம்) கஷ்டங்களும் உண்டாகதவாறு பார்த்துக்கொள்வார்கள்.
கருக்கொண்ட காலம் பிள்ளைப் பேற்றுக்கு பூர்வ (முந்தைய) காலம். ஆடி மாதத்தில், பூர்வ பல்குனி எனும் பூரம் நக்ஷத்திரம் இணையும் நாள் ஆடிப் பூரம்.
இந்த ஆடிப் பூர தினத்தில் தான் அம்பிகைக்கு வளைகாப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும்.
அம்பிகை வளையல் அலங்காரத்தின் மனம் மகிழ்ந்து, நெஞ்சம் நிறைந்து, தன் மக்கள் அனைவருக்கும் அருள் பாலிப்பாள்.
அம்பிகைக்கு வளையல்கள் வழங்கி சார்த்துவதும், வளையல் காப்பு அலங்காரத்தை தரிசனம் செய்வதும் - அற்புதமான பலன்களை வாரி வழங்கக் கூடியது, ஆனந்தத்தை வழங்கக்கூடியது, வளமான வாழ்க்கையை வழங்கக் கூடியது.

ஆடிப் பூர தினத்தில் தான் சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாகிய தமிழை ஆண்ட கோதை ஆண்டாள் இந்த ஜகத்தில் துளசிச் செடியின் கீழ் உதித்தாள்.
ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் விதைத்த ஆன்மீக விதை, பிற்காலத்தில் சமயம் காக்கும் பெரும் விருக்ஷமாக வளர்ந்தது.

ஆடிப் பூர தினத்தில் அம்பிகையை தரிசனம் செய்வோம் !
ஆனந்தமான நல்வாழ்வு பெற்றிடுவோம் !!

சூடிக்கொடுத்தாள் கோதை...சுட்டுக்கொடுத்தான் சூரியா.

வைராக்கிய நிலை எய்த...


எண்ணங்கள் ஈடேற வைராக்கியம் தேவை. அந்த வைராக்கியம் பெற இப்பாடலை வைராக்கியத்துடன் படிப்போம்


பாடல் :
பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்தவண்ணம்
காத்தவளே பின் கரந்தவளே கறைகண்டனுக்கு
மூத்தவளே என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே
மாத்தவளே உன்னை அன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே.


பொருள்: 
ஈரேழு பதினான்கு உலகங்களையும் பெற்றவளே! பெற்றதோடு மட்டுமல்லாமல் அவற்றை தாயுள்ளத்துடன் காப்பவளே! பின் அவற்றை உன்னுள்ளே மறைப்பவளே! முக்காலமுமாய் நின்று முத்தொழில் புரிபவளே! பாற்கடல் நஞ்சை கண்டத்தில் நிறுத்தி, என்னப்பனின் கண்டத்தையும் நிறுத்தி திருநீலகண்டமாக்கியவளே! பிறைகொண்ட சிரசும்....கறை கொண்ட கழுத்தும் கொண்ட எம் சுடலைக்காட்டரசனுக்கும் மூத்தவளே! என்றும் மூப்பிலா, பாற்கடல் வாசனாம் அரங்க நாயகி மணாளன், சோலை அழகனாம் திருமாலிற்கு இளையவளே! மாதவம் புரிபவளே! உன்னைத்தவிர மற்றோர் இறையை இறைஞ்சுவேனோ?...



கச்சி ஏகம்பனை உச்சியில் சுமக்கும் - ஜெ. சூரியா



திங்கள், 1 ஆகஸ்ட், 2011

நெஞ்சம் தியானத்தில் நிலைபேறு அடைய...



இந்தப் பாடலை கொஞ்சம் கொஞ்சமாய் சொல்லிப்பாருங்கள்...நெஞ்சம் ஆழ்நிலைத் தியானத்தில் நிலைப் பேறு அடையும்.


பாடல்
கண்ணியது உன் புகழ் கற்பது உன் நாமம் கசிந்து பத்தி
பண்ணியது உன் இரு பாதாம்புயத்தில் பகல் இரவா
நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து நான் முன் செய்த
புண்ணியம் ஏது என் அம்மே புவி ஏழையும் பூத்தவளே!!


பொருள் :
ஊனுருக பாடுவது உன் புகழையே! உளமுருக கற்பது உனது திருநாமங்களையே! காதலாகிக், கண்ணீர் சிந்தி பக்தி செய்வது உனது இரு பொன் திருவடிகளையே! இரவு பகல் எந்நேரமும் மகிழ்வுடன் கழித்திருப்பது நினைப்போற்றும் தூயஅடியாருடன் மட்டுமே! இத்தனை பாக்கியங்களும் ஒருசேரக் கிடைக்க முற்பிறவியில் என்ன புண்ணியம் செய்தேனோ... ஏழுலகையும் பெற்ற என் அன்னையே!




மாதொரு பாகனை...மாலொரு பாகனை...மனமொருபாகம் வைத்த - ஜெ. சூரியா


இல்வாழ்க்கையில் இன்பம் பெற...


என்னாடா....தலைப்பே ஒரு மாதிரியாய் இருக்கின்றதே என்று எண்ணாதீர்கள். கணவன் மனைவியிடையே சண்டை சச்சரவு இல்லாமல், விட்டுக் கொடுத்தல் மற்றும் ஒரு புரிதல் இருந்தால்தான் அந்த இல்வாழ்வு நல்வாழ்வாய் அமையும்.


இல்வாழ்க்கை நல்வாழ்க்கையாய் அமைய, இல்லானும் இல்லாளும் சொல்ல வேண்டிய பாடல்...


பாடல்
ஆனந்த மாய்என் அறிவாய் நிறைந்த அமுதமுமாய்
வானந்தமான வடிவுடை யாள்மறை நான்கினுக்கும்
தானந்தமான சரணாரவிந்தம் தவள நிறக்
கானந்தமாட ரங்காம் எம்பிரான் முடிக்கண்ணியதே.


பொருள் :
என் இன்பமானவளே! மதியணிந்தவனையே எண்ணும் என் சிந்தையெங்கும் வியாபித்துள்ள மதியானவளே! என் வாழ்வை நிறைத்துள்ள அமுதமானவளே! வானமே எல்லையாய்க் கொண்ட பேரழகுடையாளே! உன்னைப் போற்றுகின்ற நான்கு வேதங்களுக்கும் முதலுமாயும், முடிவுமாயும் நிற்பவளே! உடல் மீது பொடி பூசி, தீச்சட்டி கையில் ஏந்தி, கரியுரி போர்த்தி சுடலைக்காட்டில் ஆடும் எம்பெருமானின் திருமுடிகளில் தாங்கி நிற்பது மாணிக்கம் போன்று ஒளி வீசும் தாமரை போன்ற நின் திருவடிகளையே!

பிறைசூடிய பெருமானைத் தன் சிரம் சூடிய - ஜெ. சூரியா

சனி, 30 ஜூலை, 2011

முக்தி நலம் பெருக...


இம்மையும் மறுமையும் நன்றாய் அமைய ஓதுவோம் இதனை...


பாடல் :
நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பதுன்னை
என்றும் வணங்குவது உன் மலர்த் தாள் எழுதாமறையின்
ஒன்றும் அரும்பொருளே அருளே உமையே இமயத்து
அன்றும் பிறந்தவளே அழியா முத்தி ஆனந்தமே


பொருள்:
நான் நிற்கும் போதும், நடக்கும் போதும், அமரும் போதும், கிடக்கும் போதும் மேலும் எந்த நிலையிலும், எந்த செயலிலும் நினைப்பது உன்னையே! என்றும் என் சிரமும் கரமும் வணங்குவது உந்தன் மலர் போன்ற திருவடிகளையே! எழுதப்படாத (எழுத முடியாத) வேதப் பொருளாய் என் உணர்வுகளில் ஒன்றியவளே! கருணையுடன் கூடிய அருள் வடிவானவளே! எம்மை கண்ணிமையாய்க் காக்கும் உமையே! மலையரசனுக்கு மகளாய் அன்று இமயத்தில் அவதரித்த மலைமகளே! பர்வதவர்தினியே! என்றுமே அழியாத ஆனந்தமான முக்தியை அளிப்பவளே!


சிவபுரத்தரசனை "சிக்" கெனப் பிடித்த - ஜெ. சூரியா

வெள்ளி, 29 ஜூலை, 2011

சர்வ வசியம் உண்டாக....


இதைப் பாராயணம் செய்தால்....சர்வ வசியம் மட்டுமல்ல...அந்த சர்வேஸ்வரியே வசியப்படுவாள்...


பாடல் :
கருத்தன, எந்தைதன் கண்ணன, வண்ணக் கனகவெற்பின்
பெருத்தன, பால் அழும் பிள்ளைக்கு நல்கின, பேர் அருள்கூர்
திருத்தன பாரமும் ஆரமும் செங்கைச் சிலையும் அம்பும்
முருத்தன மூரலும் நீயும் அம்மே வந்து என் முன் நிற்கவே


பொருள் :
கரிய நிறம் கொண்ட, திருநீலகண்டனாம் மாதொரு பாகனின் கண்களில் நின்று அவன் கருத்தைக் கவர்ந்த, வண்ணமிகு மந்திர மாமலையாம் மேருவை விட பெரிய, உம் கனத்த திருத்தனங்களால், ஞான சம்மந்தன் போல் அழுத பிள்ளைக்கு பாலும், பேரருளும் தந்து பசியாற்றி உலக உயிர்களுக்கெல்லாம் அன்னையாய் நின்றாய். 
இப்படி பெரும் கருணை கொண்ட நின் மார்பும், அதை அலங்கரிக்கும்  மாலைகளும், உமது சிவந்த கரங்களில் வில்லும் அம்பும் பூண்டு,  முருக்கம் பூ போன்ற மென்மையான, நெருக்கமான, சிவந்த உம் இதழ்களில் புன்னகையும் தரித்து என் முன்னே தோன்ற வேண்டும்.


தில்லையானிடம் எல்லையில்லாக் கடன்பட்ட - ஜெ. சூரியா....

வியாழன், 28 ஜூலை, 2011

பற்றுகள் நீங்கி பக்தி பெருகிட .....

உலக பற்றுக்கள் நீங்கி, பக்தியெனும் மணம் பெருகிட பாடுவோம் இந்த பாடலை ....

கண்ணா...இன்னொரு துளி அமுதம் குடிக்க ஆசையா.... அப்படின்னா இதைப் படிச்சுப்பாரு....

பாடல் :
சுந்தரி எந்தை துணைவி என் பாசத் தொடரையெல்லாம்
வந்தரி சிந்துர வண்ணத்தினாள் மகிடன் தலைமேல்
அந்தரி நீலி அழியாத கன்னிகை ஆரணத்தோன்
கந்தரி கைத்தலத்தாள் மலர்த்தாள் என் கருத்தனவே

பொருள்:
அழகில் சிறந்தவளே! எம்பெருமானுக்கு துணைவியாகவும் என்னுடைய எல்லா செயல்களுக்கும் துணையாகவும் நிற்பவளே! என்னைத் தொடர்ந்து வந்து துன்பங்களைத் தரும் பந்த பாசங்களை அறுப்பவளே! செந்தூரம் அணிந்த சிவந்த வண்ண மேனியளே! எருமை முகம் கொண்ட மகிஷாசூரனை வதைத்து, அவன் தலைமேல் நின்ற துர்க்கையளே! நீல நிறம் கொண்ட காளியாய் நின்றவளே! உலகிற்கே தாயான போதிலும், என்றுமே இந்த சேயின் மேல் குன்றாத இரக்கம் காட்டுவதில்  கன்னியளே! வேதங்களை கையில் சுமக்கும் பிரம்மதேவனின் அகந்தையினால், கொய்யப்பட்ட அவரது ஐந்தாவது சிரத்தைக் கையில் கொண்டவளே! உனது மலர் போன்ற பாதங்கள் எப்போதும் என் சிந்தையில் நிற்குமே!

- தாயுமானவனின் சேயுமானவன் - சூரியா....

புதன், 27 ஜூலை, 2011

மலையான துன்பம் பனியாய் கரைய...


மலையான துன்பம் பனியாய் கரைய.....சொல்லுங்கள் இந்த துதியை....
அபிராமி அந்தாதியின் ஏழாம் பாடல்....

பாடல் :
ததியுறு மத்திற் சுழலும் என் ஆவி தளர்விலதோர்
கதியுறு வண்ணம் கருது கண்டாய் கமலாலயனும்
மதியுறு வேணி மகிழ்நனும் மாலும் வணங்கி என்றும்
துதியுறு சேவடியாய் சிந்துரானன சுந்தரியே...

பொருள் :
சுழல்கின்ற மத்திடை அகப்பட்ட தயிரினைப் போல, இங்கு பிறப்பு-இறப்பு என்று சுழலும் மத்திடை அகப்பட்டு தளர்ந்து போகும் என் ஆவியைத் தாங்கி, தளராமலிருக்க வகை செய்து மோட்ச உலகிற்கு வழி காட்டினாய். தாமரையில் உறையும் நான்முகனும், இடப்பாகம் உமக்களித்து மகிழ்ந்திருக்கும் பிறையணிந்த எம்பெருமானும், செங்கண்மாலும் என்றும் போற்றுகின்ற பாதங்களை உடைய சிவந்த செந்தூரமணிந்த பேரழகே வடிவானவளே!


அபிராமி அந்தாதி எனும் அமுதம் அனுதினமும் அருந்தும் ஆலவாயான் அடியான் சூர்யா 

புதன், 13 ஜூலை, 2011

எனக்குப் பிடித்த பாடல்...

எனக்குப் பிடித்த பாடல்...

உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் இப்பாடலை பொருளுணர்ந்து சொல்லி அருள் மழையில் நனைவோம். 

முத்தணி கொங்கைகள் ஆட ஆட    மொய்குழல் வண்டினம் ஆட ஆடச்
சித்தஞ் சிவனொடும் ஆட ஆடச்    செங்கயற் கண்பனி ஆட ஆடப்
பித்தெம் பிரானொடும் ஆட ஆடப்    பிறவி பிறரொடும் ஆட ஆட
அத்தன் கருணையொ டாட ஆட    ஆடப்பொற் சுண்ணம் இடித்தும் நாமே. 

பொருள்: 
முத்துக்களால் அலங்கரிக்கப்பட்ட தனங்கள் ஆடவும், அடர்ந்த கருமையான கூந்தலில் உள்ள வண்டினங்கள் ஆடவும், சிவந்த மீன்   போன்ற கண்கள் பணித்து ஆடவும், சிந்தனை முழுதும் சிவன் மேல் வைத்து ஆடவும், இப்பிறவி யாரோடு ஆடினாலும் பேரன்பினை மட்டும் சிவன் மேல் வைத்து ஆடவும், அந்த சிவபுரத்தரசன் நம்மேல்  கருணை வைத்து ஆடவும்   நாம் வாசமிகு  பொற் சுண்ணம் இடிப்போமாக

இவன் - அவன் - எல்லாமே சிவன் எனும் சூரியா